சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி பாமகவுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை
3/15/2016 2:43:13 PM
சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக பாமகவுடன் பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜ அணியில் தேமுதிக, பாமக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. தேர்தலுக்கு பிறகு கூட்டணியில் இருந்து மதிமுக அதிரடியாக வெளியேறியது.இந்த நிலையில் வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதே கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜ முடிவு செய்தது. இதற்காக தேமுதிக, பாமகவுடன் பலகட்டமாக பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. அதாவது, எனது தலைமையில் தான் கூட்டணி என்று விஜயகாந்த் கூறினார். பாமகவும் அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த கட்சியும் பாமக தலைமையை ஏற்கும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தெரிவித்துவிட்டது.
இதற்கிடையே மத்திய அமைச்சரும், தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகரும் கூட்டணி தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில், பாஜ தனித்து விடும் நிலைக்கு உருவானது. இந்த நிலையில், பாஜ 234 தொகுதிக்கும் நேர்காணலை நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடத்தி முடித்தது. நேர்காணலின் போது தனித்து போட்டியிட வேண்டும் என்று நேர்காணலில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்தனர். இது ஒரு புறம் இருந்தாலும் பாஜ இன்னும் கட்சிகளுடன் கூட்டணி தொடர்பாக பேசி கொண்டு தான் இருக்கிறது. அண்மையில் பாமகவுடன் கூட்டணி தொடர்பாக பாஜ ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கூட்டணி குறித்து இதுவரை அவரை அவர்கள் எந்த பதிலையும் தெரிவிக்கவில்லை.
இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேலூரில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாமகவுடன் கூட்டணி குறித்து பாஜ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், கூட்டணி குறித்து நாங்கள் எந்த பதிலையும் இதுவரை தெரிவிக்கவில்லை. பேச்சுவார்த்தை நிலுவையில் உள்ளது. கூட்டணி உள்ளதா? இல்லையா என்று தற்போது வெளிப்படையாக தெரிவிக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது” என்றார்.கூட்டணி தொடர்பாக பாஜ, பாமகவுடன் பல முறை பேசியது. ஆனால், அப்போது எல்லாம் ராமதாஸ் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் இப்போது திடீரென ராமதாஸ் கருத்தை தெரிவித்துள்ளார். இதனால், பாஜ - பாமக கூட்டணி உருவாகுமா என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.