700 கி.மீ. தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் அக்னி ஏவுகணை சோதனை வெற்றி
3/14/2016 3:07:32 PM
பாலாசூர்: ஒடிசாவில் உள்ள பாலாசூரில் இந்திய ராணுவம் சார்பில் அணு ஆயுதத்தை தாங்கி சென்று சுமார் 700 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி-1 ஏவுகணை சோதனை இன்று வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.இன்று காலை 9.15 மணி அளவில் வீலர் தீவில் நிகழ்த்தப்பட்ட இந்த சோதனையின் போது அணு ஆயுத ஏவுகணையான அக்னி-1 தனது இலக்கை வெற்றிகரமாக சென்று தாக்கியது என அதிகாரிகள் தெரிவித்தனர்.சுமார் 700 கிமீ தொலைவை 9 நிமிடங்கள் 36 நொடிகளில் அக்னி சென்று அடைந்தது. இந்திய ராணுவத்தினரின் வழக்கமான சோதனை அடிப்படையில் அக்னி-1 சோதிக்கப்பட்டது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
மேலும் அக்னி ஏவுகணையின் வழித்தடம் நேவிகேஷன் தொழில் நுட்பம் மூலமாக கம்பியூட்டரில் கண்காணிக்கப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்குவதை உறுதி செய்ய முடிந்தது. 15 மீட்டர் நீளமுள்ள அக்னியானது சுமார் 12 டன் எடை கொண்டதாகும். ஒரு டன்னுக்கும் அதிகமான வெடிபொருட்களை சுமந்து செல்லும் திறன் கொண்டதும் கூட. அக்னி-1 ஏவுகணை கடந்த 2015ம் ஆண்டு நவம்பர்1ம் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போதைய பரிசோதனையின் போதும் அக்னி -1 வெற்றிகரமாக இலக்கை சென்று தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.