தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவம் வரவழைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் தொடங்கியது
3/14/2016 3:06:34 PM
புதுடெல்லி: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பிற்கு துணை ராணுவம் வரவழைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையா் தலைமையில் டெல்லியில் தொடங்கியது. தமிழகத்தில் வரும் மே 16ம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக வாக்காளர் சேர்ப்பு, சரிபார்ப்பு, போலி வாக்காளர் மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர்கள் உள்ளவர்கள் நீக்கம் என பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேபோல, சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாகவும், இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், கல்லூரி மாணவ, மாணவிகளை வாக்காளர் பட்டியிலில் சேர்க்கும் விதமாக கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்தக்கட்டமாக அனைத்து ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் முகாம் நடத்தப்படவுள்ளது. மேலும், திருவிழா நடைபெறும் பகுதிகள், அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், விஏஓ அலுவலகம், தாலுகா அலுவலகம், ஷாப்பிங் மால்கள் ஆகிய இடங்களில் வாக்களிப்பதன் அவசியம் தொடர்பான வாசகத்துடன் கூடிய பேனர்கள் வைக்கப்படும். அதேபோல, தேர்தலுக்கு 2 நாட்களுக்கு முன்பு ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் தெரு, தெருவாக விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் எவ்வளவு பேர் தேவைப்படுவர் என்பது குறித்து முடிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் டெல்லியில் இன்று காலை துவங்கியது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கலந்து கொண்டுள்ளார்.
இந்த கூட்டத்தின் முடிவில் தமிழக தேர்தல் பணிக்கு எத்தனை கம்பெனி துணை ராணுவம் பாதுகாப்பு பணிக்கு அனுப்பப்படும் என்று தெரியவரும். இன்று மாலை சென்னை திரும்பும் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரசிங் மூலம் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து 16ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள் வாரியாக தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படவுள்ளது.