மயக்க ஸ்பிரே தெளித்து 40 பவுன் நகை கொள்ளை
3/14/2016 3:03:07 PM
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் கிராமம் பஜனைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் முருகன் (50), விவசாயியான இவர் கோழிப்பண்ணையும் நடத்தி வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (45). இவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். முருகனின் தாயாரும் இவர்களுடன் வசித்து வருகிறார். நேற்றிரவு வழக்கம்போல் அனைவரும் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினர்.இன்று காலை எழுந்து பார்த்தபோது கட்டில் பின்னால் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. தகவலறிந்த ஒலக்கூர் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். புழுக்கமாக இருந்ததால் அதிகாலையில் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்தார்களாம். அப்போது நுழைந்த மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்த முருகன் குடும்பத்தினர் மீது மயக்க மருந்து (ஸ்பிரே) தெளித்து பீரோவை உடைத்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் ெசன்றுள்ளது தெரிய வந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.