மட்டன் பிரியாணி, சிக்கன் 65 என ஆயிரம் பேருக்கு கிடா விருந்து அதிமுக நிர்வாகி ‘காதுகுத்து’
3/14/2016 3:01:55 PM
சேலம்: சேலம் மாவட்ட அரசு வழக்கறிஞராக இருப்பவர் தனசேகரன். இவர் மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி இணை செயலாளராக இருக்கிறார். அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளர். கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எம்.பி. வேட்பாளர் சீட் இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பன்னீர்செல்வத்திற்கு கிடைத்தது.அதே நேரத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளாக மாவட்ட அரசு பொறுப்பு வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் தான் அவர் நிரந்தர அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று அவரது வீட்டில் ஆயிரம் பேருக்கு திடீரென கிடா விருந்து வழங்கியது அதிமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது பேரனின் காதுகுத்து விழா என அழைத்து விருந்து கொடுத்துள்ளார்.இதுகுறித்து வழக்கறிஞர்கள் சிலர் கூறியது: மாவட்ட அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ள தனசேகரன், இதனை கொண்டாடும் வகையில் கிடா விருந்து வழங்கினார். மேலும் அவரது பேரனின் காது குத்து விழாவையும் ஒன்றாக வைத்திருந்தார்.தற்போது சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் கேட்டுள்ளார். இதனை கருத்தில் கொண்டு இந்த கிடா விருந்தை வைத்ததாக நினைக்கிறோம். இந்த விருந்துக்கு செல்வராஜ் எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள், எதிர் கோஷ்டியை சேர்ந்தவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார். மட்டன் பிரியாணி, சிக்கன் 65, முட்டை, மீன் வறுவல் என அசத்திவிட்டார். இவ்வாறு அவர்கள் கூறினர்.