பிஎன்பி பாரிபாஸ் ஓபன் நான்காம் சுற்றில் செரீனா
3/14/2016 2:53:08 PM
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் நான்காம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் இந்தியன் வெல்ஸ் நகரில் நடந்து வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்று ஆட்டங்கள் இன்று அதிகாலை நடந்தது. உலக நம்பர் 1 வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் மூன்றாம் சுற்றில் கசகஸ்தான் வீராங்கனை யூலியா புடின்ட்சேவாவை எதிர் கொண்டார். முதல் செட்டில் மட்டும் சற்றே எதிர்ப்பு காட்டினார் புடின்ட்சேவா.
இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இதில் செரீனா செட்டை கைப்பற்றினார். இரண்டாவது செட்டில் புடின்ட்சேவாவின் மூன்று சர்வீஸ் கேம்களையும் எளிதில் கைப்பற்றினார் செரீனா. இதன் மூலம் செரீனா வில்லியம்ஸ் 7-6(2), 6-0 என நேர் செட்களில் வெற்றி பெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு மூன்றாம் சுற்று ஆட்டத்தில் உக்ரேன் வீராங்கனை கேத்ரினா போன்டரென்கோ, 3-6, 6-4, 7-6(1) என்ற செட்களில் சக நாட்டு வீராங்கனையான லெசியா டுரென்கோவை சுமார் 3 மணி நேரம் போராடி வென்றார். போன்டெரென்கோ அடுத்த சுற்றில் செரீனா வில்லியம்ஸை எதிர்த்து ஆட உள்ளார்.
உலக தர வரிசையில் 9ம் இடத்தில் உள்ளவரான செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவித்தோவா மூன்றாம் சுற்றில் 6-3, 4-6, 7-5 என்ற செட்களில் ஸ்வீடன் வீராங்கனை ஜொகன்னா லார்சனை வென்றார். குவித்தோவா அடுத்த சுற்றில் அமெரிக்க வீராங்கனை நிக்கோல் கிப்ஸை எதிர் கொள்ள உள்ளார். கிப்ஸ் மூன்றாம் சுற்றில் 6-0, 6-4 என நேர் செட்களில் யாரோஸ்லாவா ஸ்விடோவாவை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.ஆடவர் ஒற்றையர் பிரிவில் 2ம் சுற்று ஆட்டங்கள் இன்று நடந்தது. உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், அமெரிக்காவின் ஜார்ன் பிராடெங்கிலோவை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் ஜோகோவிச்சின் சர்வீஸ் கேம்களை 3 முறை முறியடித்தார் பிராடெங்கிலோ. இதன் மூலம் எளிதில் முதல் செட்டை அவர் வென்றார். பிராடெங்கிலோவுக்கு 2வது செட்டில் பதிலடி கொடுத்த ஜோகோவிச், அவரது சர்வீஸ் கேம்களை 2 முறை முறியடித்து செட்டை கைப்பற்றினார். மூன்றாவது செட்டில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் எளிதில் வெற்றி பெற்றார். ஜோகோவிச் இந்த ஆட்டத்தில் 2-6, 6-1, 6-2 என்ற செட்களில் வென்று மூன்றாம் சுற்றுக்கு முன்னேறினார். பிலிப் கோல்ஸ்செரீய்பர் (ஜெர்மனி), பெலிசியானோ லோபஸ்(ஸ்பெயின்), ராபர்டோ பாடிஸ்டா அகுட் (ஸ்பெயின்), ஜாக் சோக் (அமெரிக்கா) ஆகியோரும் 2ம் சுற்றில் வெற்றி பெற்றுள்ளனர்.