ரயில் லேட்: குறட்டை டிரைவர் சஸ்பெண்ட்
3/14/2016 2:50:29 PM
விருதுநகர்: விருதுநகர் - மானாமதுரை பாசஞ்சர் நேற்று இரவு 7.40 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டது. டிரைவர் அப்துல் ஜாபர் (38) ஓட்டி வந்தார். இரவு 9 மணிக்கு விருதுநகர் வந்தடைந்தது. பின்னர் ரயில்வே நிலையத்தின் ஓய்வறையில் அப்துல் ஜாபர் அயர்ந்து தூங்கி விட்டார். தூக்கத்தில் இருக்கும் டிரைவர்களை அதிகாலை 4.30 மணிக்கு பணியாளர் ஒருவர் எழுப்பி விடுவார். ஆனால் ஜாபரை 5.30 மணிக்கு எழுப்பிவிட்டார்.இதனால் வழக்கமாக காலை 6.10 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் 7 மணியாகியும் புறப்படவில்லை. ரயிலில் அமர்ந்திருந்த பயணிகள் சிரமப்பட்டனர். இதுகுறித்து மண்டல ரயில்வே அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து மண்டல ரயில்வே மேலாளர் சுனில்குமார் கர்க், டிரைவர் அப்துல் ஜாபரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.பின்னர் மதுரையிலிருந்து மாற்று டிரைவர் வரவழைக்கப்பட்டு காலை 8.25 மணிக்கு ரயில் புறப்பட்டு சென்றது.