காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை கடை அடைப்பு: சாலை மறியல் உடுமலையில் பதற்றம்; போலீசார் குவிப்பு
3/14/2016 2:48:36 PM
உடுமலை: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த குமரலிங்கத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது மகன் சங்கர் (22). இவர் பொள்ளாச்சியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் படித்து வந்தார். அதே கல்லூரியில் கவுசல்யா(19)வும் படித்தார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்களின் காதலுக்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பை மீறி கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இதன்பிறகு சங்கரின் வீட்டில் வசித்துவந்தனர்.
நேற்று உடுமலைக்கு வந்து பொருட்கள் வாங்கினர். மதியம் 2.15 மணியளவில் உடுமலை பஸ் ஸ்டாண்ட் செல்ல எதிர்புறம் உள்ள வணிக வளாகத்தை விட்டு வெளியே வந்து, ரோட்டை கடக்க இருவரும் நின்றபோது 2 பைக்குகளில் வந்த 6 பேர், கவுசல்யா, சங்கர் ஆகியோரை சரமாரியாக வெட்டினர். இருவரும் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர். இதில் சங்கர் இறந்தார். கவுசல்யாவுக்கு கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இக்கொலை வெறித் தாக்குதல் முழுவதும் பஸ் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதைவைத்து உடுமலை போலீசார் விசாரிக்கின்றனர்.4 தனிப்படை:கவுசல்யாவின் குடும்பத்தினர் இச்செயலில் ஈடுபட்டுள்ளதாக சங்கரின் தந்தை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து எஸ்பி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி பாண்டியராஜன், டிஎஸ்பி விவேகானந்தன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
கடை அடப்பு, மறியல் : இதனிடையே சங்கரின் சொந்த ஊரான குமரலிங்கத்தில் இன்று சில அமைப்புகள் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்தன. இதனால் அந்த பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கால்நடை மருத்துவமனை அருகில் இருந்து மவுன ஊர்வலம் சென்றனர். குமரலிங்கம் பஸ்ஸ்டாப் அருகே வந்தபோது உடுமலை-பழனி ரோட்டில் அமர்ந்து திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியல் செய்தவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.