திருவள்ளூர் அருகே பரபரப்பு : ஒப்பந்ததாரர் வீட்டு ஜன்னலை உடைத்து 12 பவுன் நகை, ரூ. 50 ஆயிரம் கொள்ளை
3/14/2016 2:45:09 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே, வீட்டின் ஜன்னலை பெயர்த்து 12 சவரன் நகைகள் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர்-ஆவடி நெடுஞ்சாலையில் உள்ள வேப்பம்பட்டு பாலசுப்ரமணியம் நகரை சேர்ந்தவர் பெருமாள் (60). ஒப்பந்ததாரர். இவர், கடந்த 5ம் தேதி உசிலம்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இவரது மனைவியும் அன்று வீட்டை பூட்டிவிட்டு அம்பத்தூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.
உசிலம்பட்டியில் இருந்து அம்பத்தூர் வந்த பெருமாள், தனது மனைவியை அழைத்துக்கொண்டு நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 12 சவரன் நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரிந்தது. இது குறித்து செவ்வாப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு பெருமாள் தகவல் கொடுத்தார். போலீசார், கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். திருவள்ளூர் போலீஸ் சப்-டிவிஷனில் கடந்த 5 நாட்களில் மட்டும் 4 இடங்களில் 110 சவரன் நகைகள், ரூ.25 லட்சம் பணம் கொள்ளை போன சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.