இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் கடிதம்
3/14/2016 2:44:20 PM
சென்னை: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதம் : அண்மையில் 28 தமிழக மீனவர்களும், அவர்களது 4 படகுகளும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அண்மைக் காலமாக தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதனால் பாக் ஜல சந்தியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமையை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 13ம் தேதி நடைபெற்ற சம்பவத்தின் போது 5 மீனவர்களும், அவர்களது படகும் சிறை பிடிக்கப்பட்டது. அதற்கு முன்னதாக 12ம் தேதி 23 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 3 படகுககளை சிறைபிடித்துள்ளனர்.
இவர்கள் காங்கேசன் துறைமுகம் மற்றும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 13ம் தேதி நடைபெற்ற சம்பவத்தி–்ல் சிறை பிடிக்கப்பட்ட 4 படகுகள் உள்பட மொத்தம் 82 படகுகள் இலங்கை வசம் உள்ளது. இவற்றை நல்ல நிலையில் திருப்பி அளிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்மைக்காலமாக தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் சம்பவங்கள் தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பாக தூதரகம் வாயிலாக மத்திய அரசு தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும். இலங்கை சிறையில் உள்ள 96 மீனவர்கள் மற்றும் 82 படகுகளை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.