வண்டலூரில் வீட்டை உடைத்து 30 பவுன் கொள்ளை
3/14/2016 2:42:28 PM
கூடுவாஞ்சேரி: சென்னை வண்டலூர், எம்.கே.ஸ்டாலின் ரோடு, அண்ணா தெருவை சேர்ந்தவர் நந்தகோபால் (53). தனியார் கம்பெனி சேல்ஸ்மேன். இவருக்கு மனைவி கிரிஜா (44). மகன் ஜனார்த்தனன் (22), மகள் யாமினி (20) ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில், நந்தகோபால் தனது குடும்பத்துடன் கடந்த வியாழனன்று வேலூரை அடுத்த கண்ணமங்கலத்தில் நடைபெற்ற மனைவியின் உறவினர் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பின்னர் தனது குடும்பத்துடன் நேற்றிரவு நந்தகோபால் வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு நந்தகோபால் அதிர்ச்சியடைந்தார்.
நந்தகோபால் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர்களது வீட்டு பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள், ரூ. 10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஓட்டேரி காவல் நிலையத்தில் நந்தகோபால் புகார் செய்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, காஞ்சிபுரத்தில் இருந்த ைகரேகை நிபுணர்களை வரவழைத்து, வீட்டில் பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகளைப் பதிவு செய்தனர்.பின்னர் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.