அதிமுகவில் சீட் பேரம் ஓபிஎஸ் நண்பர் அதிரடி கைது போயஸ்கார்டன் முன்னாள் ஊழியர்கள் 2 பேர் சிக்கினர் : 10 மாவட்ட செயலாளர்கள் பதவிக்கு ஆபத்து
3/14/2016 2:32:54 PM
சென்னை: அதிமுகவில் வேட்பாளர் சீட் வாங்கித் தருவதாக சொகுசு பங்களாவில் பண பேரம் நடத்தியதாக போயஸ்கார்டன் முன்னாள் ஊழியர்கள் 2 பேர், அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வலதுகரமாக செயல்பட்டவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த சில மாதங்களாக ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்தார். அவரது உறவினர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அந்த வழக்குகள் தற்போது அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஐவர் அணி அமைக்கப்பட்டது.
அவர்கள்தான் கட்சியினர் மீது வரும் புகார்களை விசாரித்து ஜெயலலிதாவுக்கு அறிக்கை அளித்து வந்தனர். அதில் தங்களுக்கு வேண்டப்பட்டவர் அல்லது தங்களுக்கு பணம் கொடுத்தவர்கள் காப்பாற்றப்பட்டனர். அவர்கள் மீதான புகார் மனுக்கள், குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கே திருப்பி அனுப்பப்பட்டன.இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வம் தனக்கென்று ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்திருப்பது உளவுத்துறை மூலம் போயஸ்கார்டனுக்கு தெரியவந்தது. இது குறித்து சசிகலாவும் ஜெயலலிதாவின் கவனத்துக்கு கொண்டு சென்றார். மேலும் இதற்காக அவர் பல கோடி ரூபாய் பணம் வாங்கி குவித்திருப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது குறித்து விசாரணை நடத்திய ஜெயலலிதா, கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் ஆகியோரை கட்சி பணிகளில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளார்.
ஐவர் அணியில் இருந்த வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் கொண்ட புதிய அணியை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார். இவர்கள்தான் இனிமேல் தொகுதிப் பங்கீடு, கூட்டணி குறித்து பேச உள்ளனர்.இந்தநிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் சீனி முகமது மற்றும் சிலர் சேர்ந்து நீலாங்கரையில் ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்து சீட் வாங்கித் தருவதாக பலரிடமும் கோடிக் கணக்கில் பணம் வாங்குவதாக ஜெயலலிதாவுக்கு புகார்கள் வந்தன. இதனால் சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரனை போயஸ்கார்டனுக்கு வரும்படி உத்தரவிட்டார். தற்போது தேர்தல் நேரம் என்பதால் டி.கே.ராஜேந்திரன், சென்னை மாநகர உளவுத்துறை கூடுதல் கமிஷனர் வரதராஜன் ஆகியோர் வாடகை காரில் போயஸ்கார்டன் சென்றனர். அங்கு சென்றதும், ஒரு அறையில் இருந்த டெலிபோனில் போலீஸ் கமிஷனரிடம் ஜெயலலிதா பேசியுள்ளார்.
அதைத் தொடர்ந்து மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர், நீலாங்கரையில் உள்ள பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அந்த பங்களாவில் ஓ.பன்னீர்செல்வத்தின் நிழல் என்று வர்ணிக்கப்பட்டு வந்த சீனி முகமது, போயஸ்கார்டனில் பணியாற்றிய முன்னாள் ஊழியர்கள் ரமேஷ்குமார், சிவக்குமார் ஆகிய 3 பேரைப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாநிலம் முழுவதும் ஓ.பன்னீர்செல்வத்தால் நியமிக்கப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் மூலம் கட்சியினரிடம் சீட் வாங்கித் தருவதாக பல கோடி ரூபாய் பேரம் பேசி, பணம் வாங்கியது தெரியவந்தது.
இவர்களுக்கு மூளையாக செயல்பட்டது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜனின் தம்பியும் ஓய்வு பெற்ற போலீஸ் டிஎஸ்பியுமானவர்தான் என்று தெரியவந்தது. அதில், தென் சென்னை மாவட்டச் செயலாளர் எம்எம்.பாபு, வேளச்சேரி அசோக், கரூர் மாவட்டச் செயலாளர் விஜயபாஸ்கர் உட்பட பல மாவட்டச் செயலாளர்கள் கட்சியினரிடம் பணம் வசூலித்து இவர்களிடம் கொடுத்தது தெரியவந்தது. மேலும், பிடிபட்ட 3 பேரும், நாங்கள் அப்பாவிகள். எங்களுக்கு சம்பளம் மட்டுமே கொடுத்தனர். முழுப் பணத்தையும் மேலிடத்தில் கொடுத்து விட்டோம். நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றனர். ஏராளமானவர்களிடம் நாங்கள் பணம் வாங்கிக் கொடுத்துள்ளோம் என்றும் தெரிவித்தனர்.
இது குறித்து பாபுவின் வீட்டுக்கு 3 பேரையும் அழைத்துச் சென்றனர். அப்போது மத்தியக் குற்றப்பிரிவு போலீசாரிடம் இது எங்கள் கட்சிப் பிரச்னை. நாங்களே தீர்த்துக் கொள்வோம். அதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று சத்தம்போட்டுள்ளார். இதனால் போலீசார் திரும்பி விட்டனர். பின்னர் இந்த விசாரணை குறித்து ஜெயலலிதாவின் கவனத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர். அதன்பின்னர்தான் பாபு, விஜயபாஸ்கர் ஆகியோரது கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. மேலும் 10 மாவட்டச் செயலாளர்கள் கட்சியினரிடம் பணம் வாங்கி, இவர்களிடம் கொடுத்துள்ளனர் என்று தெரியவந்தது. இதனால் மேலும் 10 மாவட்டச் செயலாளர்களின் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், மேலிட உத்தரவின்பேரில் பிடிபட்ட 3 பேரும் வேறு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டனர். நடராஜனின் தம்பி மீதோ, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் கட்சியின் பெயர் கெட்டு விடும். ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் பல அமைச்சர்கள் பெயரை கெடுத்து வைத்துள்ளனர். இதனால் அவர்கள் மீது மட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கூறிவிட்டனர். இதனால் 3 பேர் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஓ.பன்னீர்செல்வத்தின் நண்பர் மற்றும் போயஸ்கார்டன் முன்னாள் ஊழியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.