எல்லை அருகே பயங்கரம் பனிச்சரிவில் சிக்கிய 73 பேர் உயிருடன் மீட்பு
3/13/2016 2:48:37 PM
நகர்: எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் இருந்து 73 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இமயமலையின் பனி மூடிய சிகரங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளிலும் பனிச்சரிவு ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த சூழலில் நேற்று காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியின் அருகே குப்வாரா-தங்தார் பகுதியில் பனிசிகரத்தில் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில்,
இந்த பகுதியில் சென்று கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் வாகனத்தில் சிக்கி தவிப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றோம். அங்கு பனிச்சரிவில் சிக்கி தவித்துக் கொண்டிருந்த குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 73 சுற்றுலா பயணிகளை ராணுவ மீட்பு படையினர் உயிருடன் மீட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் ராணுவத்தின் மருத்துவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடுமையான குளிர் மற்றும் பனி சரிவுக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் விரைவாக செயல்பட்டு அங்கு சிக்கியிருந்த அனைவரையும் உயிருடன் மீட்டனர் என்றனர்.
காஷ்மீரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கடுமையான பனிப்ெபாழிவு காணப்படுகிறது. இதனால் ஒரு சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. பனிச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து ராணுவம் மீட்பு மற்றும் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.