திருப்பதியில் சிறுத்தை நடமாட்டம்: பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்
3/13/2016 2:37:29 PM
திருமலை: திருப்பதி கோயிலுக்கு செல்லும் மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருப்பதி அலிபிரியில் இருந்து பக்தர்கள் உடமைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று இரவு திருமலைக்கு சென்றது. லாரியை தேவஸ்தான ஊழியர் ஓட்டினார். கோயிலுக்கு செல்லும் 2வது மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையோரத்தில் அமைந்துள்ள தடுப்பு சுவர் மீது சிறுத்தை ஒன்று அமர்ந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக செல்போன் மூலம் அலிபிரி சோதனைச்சாவடியில் உள்ள தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் 2வது மலைப்பாதை வழியாக பைக்கில் செல்பவர்களை கூட்டமாக செல்லுமாறு எச்சரித்து அனுப்பினர்.
பைக்கில் குடும்பத்தினருடன் செல்பவர்களை, அதிகாலை தரிசனத்தில் கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பக்தர்தி சிறுத்தை நடமாட்டத்தை தடுக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.