ஆதார் மசோதா குறித்து விவாதம் நடத்த ராஜ்யசபாவை 2 நாள் நீட்டிக்க எதிர்கட்சிகள் திடீர் கோரிக்கை
3/12/2025 4:45:41 PM
புதுடெல்லி: ஆதார் மசோதா குறித்து விவாதம் நடத்துவதற்காக ராஜ்யசபாவை 2 நாள் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.ஆதார் எண்ணுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை மக்களவையில் நேற்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் எனவும், இது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. மாநிலங்களவையில் விவாதித்துக் கொள்ளலாம் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆதார் மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவருவதை தடுக்கும் வகையில் இந்த மசோதாவை பண மசோதாவாக மத்திய அரசு தாக்கல் செய்தது. பண மசோதாவாக தாக்கல் செய்தால் அத்தகைய மசோதாவுக்கு ராஜ்யசபாவின் ஒப்புதல் தேவையில்லை. வெறும் விவாதம் மட்டுமே நடத்தப்படும். மேலும் அதில் திருத்தங்களும் செய்ய முடியாது. எந்த விதியின் கீழ் ஆதார் மசோதவை பண மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது என்பது குறித்து மாநிலங்களவையில் பிரச்னை கிளப்ப எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
ஆனால் வரும் 16ம் தேதியுடன் மாநிலங்களவை பட்ெஜட் கூட்டத்தொடர் முதல் பாகம் நிறைவுக்கு வருகிறது. பணமசோதா அறிமுகம் செய்யப்பட்ட 14 நாட்களுக்குள் அதன் மீதான விவாதம் நடத்தி முடிக்க வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் பாகம் தொடங்க 39 நாள் இடைவெளி இருப்பதால் ஆதார் மசோதா மீது விவாதம் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளன. எனவே இந்த மசோதா குறித்து விவாதம் நடத்துவதற்கு வசதியாக ராஜ்யசபாவை மேலும் 2 நாள் நீட்டிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்குமா என்பது உடனடியாக தெரியவில்லை.