நீண்ட இழுபறிக்கு பின் இன்று மாலை இந்தியா வருகிறது பாக். அணி
3/11/2025 2:59:09 PM
கொல்கத்தா: உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. தற்போது தகுதி சுற்று மற்றும் பயிற்சி போட்டிகள் நடந்து வரும் நிலையில், சூப்பர் 10 ஆட்டங்கள் வரும் 15ம் தேதி துவங்குகிறது. குரூப் 2 பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டி வரும் 19ம் தேதி தர்மசாலாவில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முன்னாள் ராணுவ வீரர்கள் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என இமாச்சல பிரதேச அரசு தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் அணி பின் வாங்கியது. இதையடுத்து பாகிஸ்தான் அதிகாரிகள் குழு இந்தியா வந்து தர்மசாலா மைதானத்தை ஆய்வு செய்து அந்நாட்டு அரசிடம் அறிக்கை அளித்தது.
அதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதால், இந்தியா- பாகிஸ்தான் போட்டி தர்மசாலாவில் இருந்து கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்திற்கு மாற்றப்பட்டது. இருப்பினும் கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியா புறப்பட இருந்த பாகிஸ்தான் அணியின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. வீரர்களின் பாதுகாப்பு குறித்து இந்திய அரசாங்கம் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும் என பாகிஸ்தான் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அண்மையில் இந்தியாவில் தெற்காசிய விளையாட்டு போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றதையும், உரிய பாதுகாப்புடன் போட்டி நடத்தி முடிக்கப்பட்டதாகவும், இங்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இல்லை என இந்தியா தரப்பில் உறுதியாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட இழுபறிக்கு பின்னர் பாகிஸ்தான் அணி இன்று இந்தியா வருவது உறுதியாகி இருக்கிறது. இன்று மாலையில் பாகிஸ்தான் அணி இந்தியா வந்தடையும் என மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவரும், முன்னாள் இந்திய கேப்டனுமான சவுரவ் கங்குலி உறுதிப்படுத்தி உள்ளார். துபாயில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் பாகிஸ்தான் அணி கொல்கத்தா வந்தடையும் என அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி நாளை மாலை பெங்கால் அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. வரும் 13ம் தேதி இலங்கையுடன் மற்றொரு பயிற்சி போட்டியில் ஆடும் பாகிஸ்தான், சூப்பர் 10 பிரிவில் வரும் 16ம் தேதி தகுதி சுற்றில் வெற்றி பெற்று நுழையும் அணியுடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.