டி20 ஸ்பெஷலிஸ்ட்டுகள்மோதல் பயிற்சி போட்டியில் இன்று இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் பலப்பரீட்சை
3/10/2025 3:11:17 PM
கொல்கத்தா: உலக கோப்பை டி20 தொடரில், தனது முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா வரும் 15ம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. முன்னதாக 2 பயிற்சி போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இதன்படி முதல் பயிற்சி போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் இந்தியா இன்று மோதுகிறது. ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றதுடன், ஆசிய கோப்பையிலும் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று வலுவாக உள்ளது. பும்ரா, பாண்ட்யா போன்ற மிகச்சிறந்த இளம் வீரர்களை இந்த தொடர்களின் வாயிலாக இந்தியா கண்டறிந்துள்ளது. இவர்களுடன் நெஹ்ராவின் அனுபவமும் கைகொடுத்தது. பேட்டிங்கில் தவான், ரோகித், கோஹ்லி, ரெய்னா, யுவராஜ், டோனி என பெரும் படையே உள்ளதால், இந்தியா உலக கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு பயிற்சி பெறும் வகையில் இந்தியா இந்த போட்டிகளை பயன்படுத்தி கொள்ளும். வெளிநாட்டு சுற்றுப்பயணம் முடிந்து மீண்டும் இந்திய மைதானங்களுக்கு ஏற்ற வகையில் தயாராகவும் இது உதவும். டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தடுமாறினாலும், டி20 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி மிகவும் அபாயகரமானது. அதிரடிக்கு பெயர் பெற்ற கிறிஸ் கெய்ல், ரஸ்ஸல், டுவைன் பிராவோ, கேப்டன் சம்மி போன்ற வீரர்கள் உள்ளனர். வலுவான வெஸ்ட் இண்டீசை வீழ்த்தினால், இந்தியா இன்னும் அதிக நம்பிக்கையுடன் உலக கோப்பையை எதிர் கொள்ளும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகிறது. மும்பையில் நடக்கும் மற்றொரு பயிற்சி போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.