சிவன்மலை கோயிலில் ஆண்டவன் உத்தரவில் உப்பு ‘ஏதாவது மாற்றம் வருமாம்’
3/10/2025 3:00:12 PM
காங்கயம்: காங்கயம் அருகே, சிவன்மலையில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலில் உப்பு வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது. இதனால், என்ன மாற்றம் வரும் என பக்தர்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், காங்கயம் அடுத்துள்ள சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. மலை மீதுள்ள இந்த கோயில் சன்னிதானத்தில் ஆண்டவன் உத்தரவு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பெட்டியில் நேற்று முதல் உப்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. சிவன்மலை ஆண்டவர் தன்னுடைய பக்தர் ஒருவரின் கனவில் வந்து குறிப்பிட்ட ஒரு பொருளை கூறி, கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து பூஜை செய்யும்படி கூறுவாராம். அதன்படியே சிவன்மலை ஆண்டவரிடம் பூ வைத்து கேட்கப்படும். அவ்வாறு ஆண்டவன் உத்தரவு கிடைத்தவுடன் அந்தப் பொருள், கோயில் மூலவர் அறைக்கு முன்பாக உள்ள கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து தினசரி பூஜை செய்யப்படும்.
கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்படும் பொருள், சமுதாயத்தில் முக்கியத்துவம் பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடந்த ஜனவரி 14ம் தேதி முதல் சிவன்மலை ஆண்டவன் உத்தரவுப்படி கண்ணாடிப் பெட்டிக்குள் இரும்பு வைக்கப்பட்டிருந்தது. தற்போது பக்தர் ஒருவரின் கனவில் வந்த உத்தரவுப்படி, உப்பு வைத்து பூஜை செய்யப்படுகிறது. இது குறித்து பக்தர்கள் தரப்பில் கூறப்படுவதாது:
சிவன்மலை ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜை செய்யப்படும் பொருள் காரணமாக, அந்தப் பொருள் சம்பந்தமாக ஆக்கம் அல்லது அழிவு போன்ற செயல் நடந்துள்ளன. தங்கம் வைத்து பூஜை செய்தபோது, அதன் விலை உச்சத்தை தொட்டது. தற்போது, வைக்கப்பட்டுள்ள உப்பு காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை ஏற்றம் ஏற்படலாம் அல்லது வேறு ஏதாவது மாற்றம் வரலாம். இதன் உண்மையான தாக்கம் என்ன என்பது போகப்போகத்தான் தெரியவரும் என்றனர்.