குடும்பத்தையே கட்டி போட்டு 100 பவுன் நகை, பணம் கொள்ளை ஈசிஆரில் அதிகாலை துணிகரம்
3/5/2025 1:25:23 PM
துரைப்பாக்கம்: சென்னை ஈஞ்சம்பாக்கம் ஷாலிமார்க் கார்டனை சேர்ந்தவர் லட்சுமி நாராயணன் (61). சென்னை துறைமுகத்தில் பொறியாளராக வேலை பார்த்து ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி வாசுகி (58). இவர் ஓவிய ஆசிரியை. இவர்களது மூத்த மகள் மோனிஷா (26), சாப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றுகிறார். இளைய மகள் மவுனிஷா (23), எம்.ஏ. இறுதியாண்டு படிக்கிறார்.இவர்கள் அனைவரும் நேற்றிரவு சாப்பிட்டு விட்டு தூங்கசென்றனர். இன்று அதிகாலை மூகமூடி ஆசாமிகள் 4 பேர், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே செல்ல வந்தனர். இவர்களை பார்த்ததும் வீட்டில் உள்ள 2 நாய்கள் குரைத்தன. இதனால் நாய்கள் மீதும் மயக்க ஸ்பிரே தெளித்தனர். 2 நாய்களும் மயங்கி விழுந்தது.
இதன்பிறகு மர்ம நபர்கள், கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர்.தூங்கிக்கொண்டிருந்த லட்சுமி நாராயணனை முகமூடி நபர்கள் எழுப்பி, அவரது கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணத்தை கேட்டு மிரட்டியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வாசுகி சத்தம் போட்டார். இதனால் வாசுகியின் கழுத்தில் கத்தியை வைத்து, ‘சத்தம் போட்டால் குத்திவிடுவேன்’ என்று மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளனர். அப்போது மகள்களும் ஓடி வந்தனர். முகமூடி நபர்கள், அவர்களை அடித்து உதைத்து நகைகளை கேட்டுள்ளனர். மவுனிஷாவின் அறையில் படுத்திருந்த நாய் ஓடிவந்து முகமூடி ஆசாமிகளை கடிக்க பாய்ந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த 4 பேரும் மவுனிஷாவை பிடித்து, அவரது கழுத்தில் கத்தியை வைத்து, ‘நாயை கட்டுப்படுத்துகிறாயா இல்லை, கொல்லட்டுமா’ என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன மவுனிஷா, நாயை கட்டுப்படுத்தினார்.
இதனிடையே மோனிஷா, தனது செல்போனில் போலீசாருக்கு தகவல் கொடுக்க முற்பட்டபோது அவரையும் அடித்து உதைத்தனர். 4 பேரையும் கயிற்றால் கட்டி ஒரு அறையில் போட்டனர். அவர்கள் அணிந்திருந்த 10 பவுன் நகைகள் மற்றும் பீரோவில் இருந்த 90 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை எடுத்து கொண்டு முகமூடி ஆசாமிகள் தப்பிச்சென்றனர்.மெல்ல மெல்ல கட்டுகளை அவிழ்த்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லட்சுமி நாராயணன் தொடர்பு கொண்டார். போலீசார் போனை எடுக்காததால், அக்கம் பக்கத்தினரிடம் தெரியப்படுத்தினார். அவர்கள் மூலம் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடையாறு துணை கமிஷனர் பிரணவ்குமார், நீலாங்கரை உதவி கமிஷனர் பாண்டியன், இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார், எஸ்ஐ மாணிக்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். கதவை உடைத்து உள்ளே சென்று 4 பேரையும் மீட்டனர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன. மோப்ப நாய் ஜூலி வரவழைக்கப்பட்டது. அது அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி வழியாக சென்று சுமார் 2 கிமீ தூரத்தில் உள்ள ஈஞ்சம்பாக்கம் பஸ் நிறுத்தத்தில் நின்றது. இதற்கிடையில் போலீசார் உதவியுடன் உருட்டுக்கட்டைகளுடன் அப்பகுதி முழுவதும் கொள்ளையர்களை பொதுமக்கள் தேடினர். கொள்ளையர்கள் தலைமறைவாகி விட்டனர்.
போலீசார் வழக்கு பதிந்து, அப்பகுதியில் உள்ள காவலாளிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் 4 இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளையடித்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
பரிவு காட்டிய கொள்ளையர்கள்இதுகுறித்து லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘அதிகாலையில் வீட்டுக்குள் புகுந்த 4 பேர்களில் 2 பேர் முகமூடி அணிந்திருந்தனர். 2 பேர், எங்கள் வீட்டில் இருந்த நைட்டியை கிழித்து முகத்தில் கட்டினர். எங்களை கத்தியால் மிரட்டி பணம், நகையை கேட்டனர். சத்தம் கேட்டு வந்த 2 மகள்களையும் அடித்து உதைத்தனர். இதனால் எனது மனைவி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்ற ஆம்புலன்ஸ் வரவழைக்கட்டுமா என ஒருவன் கேட்டான். தண்ணீர் தெளித்தால் சரியாகி விடும் என்று கூறினேன். உடனே தண்ணீர் எடுத்து வந்து தெளித்து அவரை எழுப்பினோம். என் மகளுடன் வந்த நாய் அவர்களை கடிக்க பாய்ந்ததால் கத்தியால் மிரட்டி நாயை கட்டுப்படுத்தும்படி மிரட்டினர். மேலும் மூத்த மகள் போன் செய்ய முயன்றபோதும் அவளை அடித்து உதைத்தனர். என்றார்.
ஓவியம் மூலம் தேடல் வாசுகி, ஓவியர் என்பதால் கொள்ளையடிக்க வந்தவர்களில் ஒருவன் முகமூடி அணியவில்ைல. அதனால் அவரது உருவத்தை வரைந்து கொடுக்கும்படி போலீசார் கேட்டு கொண்டனர். இதையடுத்து அவரது உருவத்தை வரைந்து வாசுகி கொடுத்துள்ளார். அதன் மூலம் கொள்ளையர்களை தேடி வலைவீசி ேதடி வருகின்றனர்.போனை எடுக்காத ‘100’கொள்ளை குறித்து புகார் தெரிவிக்க லட்சுமி நாராயணன், காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டார். ஆனால் போலீசார், போனை எடுக்கவில்ைல. இதனால் வேறு வழியின்றி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நீலாங்கரை காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர உதவி என கூறி வரும் காவல் துறை போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்தார்.