தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல் திருச்சியில் ரூ 1.5 லட்சம் பறிமுதல்
3/5/2025 1:22:35 PM
திருச்சி,தமிழகம், புதுச்சேரி, கேரளம், அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் 22ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. மே 16ம் தேதி ஓட்டுப்பதிவும், மே 19ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
தேர்தல் தேதிஅறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன. தலைமை தேர்தல் ஆணையர் தேர்தல் தேதியை அறிவித்த 2 மணி நேரத்தில் தமிழகத்தின் அனைத்து துறைகளிலும் கடைசியாக என்னென்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன என்பதை தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும் என ஏற்கனவே தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் வேண்டியவர்களுக்கு சில சலுகைகள் காட்டி, அதனை முன்தேதியிட்டு கணக்கு காட்டுவதை தடுக்க இந்த உத்தரவை பிறப்பித்தார்.
எனவே நேற்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இதைத்தொடர்ந்து அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் அகற்றப்பட்டன. அனைத்து செக்போஸ்ட்களிலும் வாகன தணிக்கைகள் தொடங்கின. அமைச்சர்கள் அரசு வாகனங்கள், அரசு விருந்தினர் இல்லங்களையோ, எந்திரங்களையோ பயன்படுத்தக்கூடாது. அரசு விழாக்களில் அமைச்சர்கள் பங்கேற்க கூடாது. இந்த திட்டத்தை செய்யப்போகிறோம், ரோடு போடப்போகிறோம், குடிநீர் வசதி செய்து தரப்போகிறோம் என எதையும் அறிவிக்க கூடாது.
அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிய நியமனங்கள் செய்யக்கூடாது. இடமாறுதல், பதவி உயர்வு அளிக்க கூடாது. அரசு பணியாளர்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ தங்களுக்கு சாதகமாக அமைச்சர்கள் பயன்படுத்தக்கூடாது.வாக்காளர்களை கவரும் வகையில் பணமோ, பொருளோ வழங்க கூடாது. பொதுமக்கள் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கத்தையோ, நகை போன்ற விலை உயர்ந்த பொருட்களையோ எடுத்து செல்லும்போது அதற்கான ஆவணங்களை எடுத்து செல்ல வேண்டும். சாலைகள், அரசு கட்டிடங்கள் ஆகியவற்றில் விளம்பரம் செய்யக்கூடாது. தனியார் சுவர்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் முறைப்படி எழுத்துபூர்வமாக அனுமதி பெற்று விளம்பரம் செய்ய வேண்டும்.
வழிபாட்டு தலங்களை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது. அரசியல் கட்சிகள் அல்லது வேட்பாளர்கள் கூட்டம் நடத்த உத்தேசித்துள்ள இடம் நேரம் குறித்து உள்ளூர் போலீசாரிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும். இதனை கண்காணிக்க தேர்தல் கமிஷன் பறக்கும்படை, கண்காணிப்பு படை, வீடியோ கண்காணிப்பு குழுக்கள் வரவு செலவை கண்காணிக்கும் குழுக்களை உருவாக்கி உள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் வட்டார வளர்ச்சி அதிகாரி அந்தஸ்தில் உள்ள ஒரு அதிகாரி தலைமையில் 3 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த 3 படைகளிலும் தலா 3 போலீசாரும் இருப்பார்கள். வாக்குப்பதிவு முடிந்து வாக்குகள் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டு தேர்தல் பணி நிறைவடைந்தது என தேர்தல் கமிஷன் அறிவிக்கும் வரை இந்த உத்தரவுகள் நடைமுறையில் இருக்கும்.
திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் வாகனத் தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி சமயபுரம் டோல்கேட்டில் நேற்று இரவு தேர்தல் அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து திருச்சி வந்த காரில் ரூ.1.5 லட்சம் வைத்திருந்தனர். அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் காரில் வந்தவர்கள் வியாபாரிகள் என்றும் அவர்கள் பொருட்கள் கொள்முதல் செய்ய பணம் கொண்டு வந்ததால் அந்த பணத்தை அவர்களிடம் திரும்ப ஒப்படைத்து விட்டனர்.