இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தமிழகம் முழுவதும் அதிமுகவினர் தேர்தல் விதிமுறை மீறல் இலவச பொருட்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவதால் பரபரப்பு

3/5/2025 1:20:37 PM
மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி மக்கள்நல கூட்டணியுடன் சேர்ந்தது ஏன்? விஜயகாந்த் பேச்சு

திருச்சி: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுகவினர் மாநிலம் முழுவதும் பல இடங்களில் இலவச பொருட்கள் மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் இலவசப்பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன.

தமிழகம், புதுவை, கேரளா மாநிலங்களுக்கு மே 16ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி நேற்று டெல்லியில் அறிவித்தார். இதையடுத்து தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகள், புதுச்சேரியில் உள்ள 30 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவில் உள்ள 140 தொகுதிகள் என 3 மாநிலங்களுக்கும் மே 16ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அப்போது அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி அதிமுகவினர் பல இடங்களில் அரசின் இலவச பொருட்களை பதுக்கி வைத்து அவற்றை வழங்கியும், பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவித்தொகை வழங்குவது, சாலை அமைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அரசு அதிகாரிகளும் உடந்தையாக இருந்து கண்டும் காணாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கரூர் நகராட்சி 36வது வார்டு அதிமுக கவுன்சிலர் முனியப்பன் என்கிற பிரபு நேற்று மாலை 5 மணியளவில் விடுபட்ட பயனாளிகளுக்கு கரூர் பசுபதிபாளையம் விவேகானந்தா பள்ளியில் உள்ள அறையில் வைத்திருந்த இலவச பொருட்களை வழங்கிக்கொண்டிருந்தார். தகவலறிந்து அங்கு சென்ற திமுகவினரை பார்த்ததும் கவுன்சிலர் பிரபு இலவச பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறைக்கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இலவச பொருட்களை வாங்கிய பொதுமக்கள் ஆட்டோ பிடித்து அவற்றை வீடுகளுக்கு கொண்டுசென்றனர்.

அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், ‘அரசு வழங்கும் இலவச பொருட்களை ஆளும்கட்சி கவுன்சிலர் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். எந்த அடிப்படையில் அதிகாரிகள் இப்படி அவரது பொறுப்பில் பொருட்களை கொடுத்தனர் என்பது தெரியவில்லை. மாலை 5.30மணி வரை இலவச பொருட்களை வழங்கிக்கொண்டிருந்த அவர் அதன்பின்னர் அங்கிருந்து போய்விட்டார். நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே ஆளும்கட்சிக்காரரிடம் அரசின் இலவச பொருட்களை கொடுத்து வைத்தது கண்டிக்கத்தக்கது’ என்றார்.

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் ஜனவரி 11ம் தேதி 944 பேருக்கு தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. தங்கம் பெற்ற பலருக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ஏறவில்லை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் லலிதா இரு தினங்களுக்கு முன் கூடுதல்பொறுப்பேற்று, முடங்கி கிடந்த பணிகளை முடுக்கிவிட்டு பயனாளிகளுக்கு காசோலை வழங்க ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்றுமதியம் 3 மணிக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்குவந்துவிடும் என்பது தெரிந்திருந்தும் சமூக அலுவலர் லலிதா, பணம்பெறாதப் பயனாளிளை அழைத்து, அலுவலக கதவுகளை மூடிவிட்டு அவசர அவசரமாகக் காசோலைகளை வழங்கத் தொடங்கினார். இதையறிந்த செய்தியாளர்கள் காசோலை வழங்குவதை படமெடுக்க முயன்றதை அடுத்து அவர் உடனடியாக இடத்தை காலி செய்து நகர்ந்துவிட்டார்.திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதமாக அரசின் இலவச பொருட்களான மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் நிகழ்ச்சி மும்முரமாக நடந்தது. இவ்வாறு வழங்கப்பட்ட பொருட்கள் சேதமடைந்திருந்ததால் அதை ஒரு சிலர் வேண்டாமென கூறிவிட்டனர். மேலும் இலவச பொருட்களை கேட்டு சென்ற பலருக்கு அட்டவணையில் உங்கள் பெயர் இல்லையென

திருப்பி அனுப்பப்பட்டனர். இவ்வாறு திருவாரூர் பகுதியில் வேண்டாமென சொன்னவர்கள் மற்றும் பட்டியலில் பெயர் இல்லையென திருப்பி அனுப்பியவர்களுக்கான இலவச பொருட்கள், ஒரு சில பள்ளிக்கூடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் நேற்று மாலை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே திருவாரூர் மடப்புரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் பதுக்கி வைத்திருந்த 100க்கும் மேற்பட்ட மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை ஆட்டோ, கார் மற்றும் மினிவேனில் அதிமுகவை சேர்ந்த திருவாரூர் நகராட்சி தலைவரான ரவிச்சந்திரன் மூலம் அவசர அவசரமாக வேறு இடங்களுக்கு கொண்டு சென்று பதுக்கப்பட்டன.

மாலை 5 மணியளவில் திருவாரூர் பைபாஸ் சாலையில் இயங்கி வரும் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வைக்கப்பட்டிருந்த இலவச பொருட்கள் பொதுமக்கள், அதிமுகவை சேர்ந்தவர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. இப்படி இலவச பொருட்கள் தேர்தல் விதிமுறைகளை மீறி கொடுக்கப்படுவதை அதிகாரிகள் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை.
திருவாரூர் பஸ் நிலையத்தில் நேற்று மாலை 6.30மணிக்கு திடீரென சாலை அமைக்கும் பணி அவசர அவசரமாக நடந்தது.

இதனால் பஸ் நிலைய வழி அடைக்கப்பட்டதுடன் பஸ்கள் பஸ்நிலையத்துக்கு வெளிப்புறம் நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். சாலை பணியாளர்கள் வேகமாக தார் ஊற்றி பஸ் நிலையம் முழுவதும் சாலையை சீரமைத்தனர். 3 மணிநேரத்தில் அவசர கதியில் சாலை சீரமைக்கப்பட்டது.
தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால் நகர் முழுவதும் கட்சியினரின் பிளக்ஸ்போர்டுகள், சுவர் விளம்பரங்கள் அகற்றப்பட்டுள்ளதா என கண்காணிக்கும் பணியில் மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மதிவாணன், எஸ்பி ஜெயச்சந்திரன் ஆகியோர் ஈடுபட்டனர். பஸ்நிலையத்தில் சாலைஅமைக்கும் பணியையும், அதனால் ஏற்பட்ட போக்குவரத்தை பாதிப்பையும் அந்த வழியே வந்த அவர்கள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே கோம்பையில்  நேற்றிரவு கம்பம் திமுக எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில் திமுகவினர்  தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரவு 7 மணியளவில்  அவ்வழியாக இரு சரக்கு ஆட்டோக்களில் தமிழக அரசு முத்திரையுடன், முதல்வர்  ஜெயலலிதா படத்துடன் கூடிய ஸ்கூல்பேக் மற்றும் செருப்பு ஆகியவை பண்டல்,  பண்டலாக ஏற்றி வருவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, திமுக மாநில  பொதுக்குழு உறுப்பினர் அனீபா, ஒன்றியச்செயலாளர் குமரன், மாவட்ட திமுக  இளைஞரணி அமைப்பாளர் குமார், கோம்பை பேரூர் செயலாளர் முருகன் ஆகியோர்  தலைமையில் பண்ணைப்புரம் அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிராமத்தில் சரக்கு  ஆட்டோக்களை சிறைப்பிடித்தனர். அவற்றை ஓட்டி வந்த டிரைவர்களிடம், ‘இவை  யாருடையது, எங்கு கொண்டு செல்லப்படுகிறது’ என கேட்டனர். அதற்கு அவர்கள்  சரியான பதில் தரவில்லை.

இதுகுறித்து திமுகவினர் தேவாரம் போலீசாருக்கும்,  கம்பம் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியான உத்தமபாளையம் ஆர்டிஓ  ராசய்யாவிற்கும் தகவல் அளித்தனர். பின்னர் சிறைப்பிடித்த இரண்டு மினி லோடு  ஆட்டோக்களையும் தேவாரம் காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பண்டல்களில்  பட்டுவாடா செய்வதற்காக பணத்தை அதிமுகவினர் அனுப்பி இருக்கலாம். எனவே,  தேர்தல் அதிகாரி வந்து பண்டல்களை பிரித்து காட்டும் வரை நகர மாட்டோம் என  திமுகவினர் தேவாரம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல்  அதிகாரி ராசய்யா தேனி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான  கூட்டத்திற்கு சென்றதால் இரவு 10 மணியளவில் வந்தார். உடன் போடி டிஎஸ்பி  பிரபாகரனும் வந்தார். திமுகவினர் முன்னிலையில் பண்டல்கள் பிரிக்கப்பட்டன.  உள்ளே முதல்வர் படத்துடன் கூடிய பள்ளி மாணவர்களுக்கு வழங்கக்கூடிய இலவச  ஸ்கூல் பேக்குகள் மற்றும் காலணிகள் இருந்தன.விசாரணையில்,  ‘உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து அமைச்சர் ஓபிஎஸ்  தொகுதியான போடி நோக்கி சரக்கு லாரிகள் சென்றது’ தெரிய வந்தது. மேலும்,  ஆட்டோக்கள் பிடிக்கப்பட்ட மல்லிங்காபுரம் கிராமம் போடி தொகுதியில்தான்  உள்ளது. இந்த பொருட்களை இரவோடு, இரவாக போடி தொகுதியில் விநியோகிக்க  திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பண்டல்கள்  சீலிடப்பட்டு மீண்டும் உத்தமபாளையம் மாவட்ட கல்வி அலுவலகத்திற்கே கொண்டு  செல்லப்பட்டது.

தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்டு நடத்தை விதிகள்  அமலுக்கு வந்து விட்டன. இருப்பினும் முன்னாள் முதல்வர், நிதியமைச்சர்  பொறுப்பில் இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியிலேயே இலவச பொருட்களை  இரவோடு, இரவாக விநியோகம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி  உள்ளது. தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு  வினியோகிக்க இலவசப்பொருட்கள் பதுக்கல், நலத்திட்ட உதவிகளைச் சத்தமில்லாமல்  வழங்குதல், வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை விதிமுறைகளை மீறி  நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

பள்ளி முடியும்போது வழங்குவதா? பெற்றோர் கடும் கண்டனம்

பிளஸ்  2 பொதுத்தேர்வுகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. அடுத்து 10ம் வகுப்பு  தேர்வுகள் நடக்க உள்ளன. தேர்தல் மே 16ல் நடப்பதால் பெரும்பாலான  பள்ளிகளுக்கு ஏப்ரல் மாதத்திற்குள் தேர்வு நடத்தி கோடை விடுமுறை விரைவிலேயே  விடப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் பள்ளி முடியும் தருவாயில் இலவச  பொருட்களை அவசர, அவசரமாக வழங்குவது ஏன்? முன்னரே தந்திருந்தால்  அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்திருக்குமே என பெற்றோர் கருத்து  தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • செம்பாக்கம் நகராட்சியில் விதிகளை மீறி கட்டிடம் கட்டும் பணி அதிகாரிகள் மெத்தனம்



  • தாம்பரம் தொகுதியில் பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு வேதசுப்பிரமணியம் துவக்கினார்



  • பிரஸ்செல்சில் தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலி : ஏர்போர்ட்டில் 5 அடுக்கு பாதுகாப்பு



  • அதிமுகவுடன் கூட்டணியா? மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி பேட்டி



  • இம்மாத இறுதியில் கூட்டணி முடிவு ஜி.கே.வாசன் பேட்டி



  • தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி நகைப்புக்குரிய நிகழ்வு: பாமக



  • கூட்டணி ஆட்சி மந்திரிசபையில் இடம் தேமுதிக உறுதி என வைகோ தகவல்



  • ஆதம்பாக்கத்தில் வீட்டுக்குள் குதித்த சிறுத்தை?



  • மக்கள் நல கூட்டணியுடன் விஜயகாந்த் சேர்ந்ததால் திமுக கூட்டணிக்கு பாதகம் ஏற்படாது மு.க.ஸ்டாலின் பேட்டி



  • ஏப்ரல் 15 முதல் ஆன்லைனில் எப்ஐஆர்



Facebook

Twitter

வெளிநாட்டில் கவர்ச்சி ‘தண்டால்’ எடுத்த ஹீரோயின்
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
  • இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் படிப்பதற்கு கடன் பெறுவது எப்படி?
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2015 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102
Newspaper Advertisement
Ph: 91-44-42209191 Extn:21240, 21241
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]