ஜெ. தொகுதியில் மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்பு : அதிமுக கவுன்சிலர், வட்ட செயலாளர் மீது புகார்
3/4/2025 3:51:21 PM
தண்டையார்பேட்டை: ஜெயலலிதா தொகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிமுக கவுன்சிலரும், வட்ட செயலாளரும் ஆக்கிரமிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் மாநகராட்சிக்கு சொந்தமான ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வந்தது. தற்போது, இந்த சுகாதார நிலையம், காலி செய்யப்பட்டதால் கட்டிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தின் பின்புறம் உள்ள சுமார் 150 சதுர அடி கொண்ட இடத்தை, கடந்த சில நாட்களாக சிலர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்டி வந்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த மீனவ மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், அந்த இடத்தில் அதிமுக கவுன்சிலர் சசிகலாவும், வட்ட செயலாளர் நாகலிங்கமும் சேர்ந்து ஆக்கிரமிப்பு செய்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து திமுக வட்ட செயலாளர் கஜேந்திரன் என்பவர், நேற்று காசிமேடு மீன்பிடி துறைமுக காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், ‘மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிமுக கவுன்சிலரும், அதிமுக வட்ட செயலாளரும் ஆக்கிரமிப்பு செய்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் கூறியிருந்தார். இந்த புகாரை பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முதல்வர் ஜெயலலிதா தொகுதியிலேயே மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்ததாக அதிமுக கவுன்சிலர் மற்றும் வட்ட செயலாளர் மீது புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.