பாக். ஆதரவாளர்களை கொல்வோம் மேற்கு வங்க பாஜ தலைவர் ஆவேசம்
3/4/2025 3:49:35 PM
கொல்கத்தா: டெல்லி நேரு பல்கலை கழக விவகாரத்திற்கு பிறகு பாஜ தலைவர்கள் பலரும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி வருவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மக்களை பிளவுபடுத்தி கலவரத்தை தூண்டும் வகையில் பேசும் தலைவர்கள் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க தவறி வருவதாகவும் குற்றச்சாட்டி வருகின்றனர். இந்த சூழலில் மேற்கு வங்கத்தில் பாகிஸ்தான் ஆதரவாளர்களை கொல்வோம் என பாஜ மாநில தலைவர் திலீப் கோஷ் பேசியது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிர்பும் மாவட்டத்தில் இலாம்பசார் பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மாவட்ட கலெக்டரை சந்தித்து புகார் தெரிவித்து விட்டு வந்த திலீப் கோஷ் கூறுகையில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் யாராக இருந்தாலும் விட மாட்டோம். அவர்கள் தலையை வெட்டி ஆறு அடி ஆழத்தில் உடலை புதைத்து விடுவோம். மத்தியில் இருப்பது காங்கிரஸ் அரசு அல்ல. பிரதமர் மோடியின் அரசு. அவர் காங்கிரசை போல சும்மா பேசிக் கொண்டு இருக்க மாட்டார். மாவோயிஸ்டாக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளாக இருந்தாலும், அடித்து நொறுக்கி விடுவார். பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள், செயல்படுபவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, தீவிரவாதிகளானாலும் சரி, எழுத்தாளர்கள், பாடகர்கள், சிந்தனையாளர்கள் அனைவரையும் தூக்கி பங்களாதேஷில் வீசி விடுவோம்.
இந்தியாவிடம் வாலாட்டினால் நமது படைகள் சும்மா இருக்க மாட்டார்கள், நமது படையினரின் பதிலடியில் எதிரிகள் தங்களது பிணங்களை எண்ணிக் கொண்டு எடுத்து செல்ல வேண்டியதுதான். மேற்கு வங்கத்தை ஒரு ஆப்கானாகவோ, சிரியாவாகவோ மாற பாஜ ஒரு போதும் அனுமதிக்காது என்று ஆவேசமாக தெரிவித்தார்.தற்போது திலீப் கோஷ் பேச்சுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.