பாகிஸ்தான் மீண்டும் மிரட்டல்: தர்மசாலாவில் திட்டமிட்டபடி இந்தியா-பாக். போட்டி நடக்கும்: அனுராக் தாக்கூர் உறுதி
3/4/2025 2:52:13 PM
தர்மசாலா: உலக கோப்பை டி20 தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி வரும் 19ம் தேதி தர்மசாலாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் பாகிஸ்தானுடன் விளையாடுவதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தீவிரவாத தாக்குதலில், இமாச்சல் வீரர்கள் உயிரிழந்ததின் எதிரொலியால், இந்த போட்டிக்கு பாதுகாப்பு அளிக்க முடியாது என அம்மாநில முதல்வர் வீரபத்ரசிங், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கடிதம் எழுதினார்.
இது குறித்து பிசிபி தலைவர் ஷகாரியார்கான் கூறுகையில், ‘‘இமாச்சல் முதல்வர் கூறியுள்ளதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. எங்கள் வீரர்களின் பாதுகாப்பு தொடர்பாக உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் உலக கோப்பை டி20 தொடரில் இருந்து வெளியேற நேரிடும்,’’ என்றார். இது குறித்து பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர் கூறுகையில், கடந்த காலங்களில் நடந்த ஜம்மு-காஷ்மீர் மற்றும் சமீபத்தில் நடந்த பதன்கோட் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் பேசுவதாக, இமாச்சல் முதல்வர் வீரபத்ரசிங் உறுதியளித்துள்ளார். இந்த போட்டி திட்டமிட்டபடி தர்மசாலாவில் நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.