சிம்புவுக்கு ஹாலிவுட் மேக்அப்
3/4/2025 2:50:16 PM
கோலிவுட்டில் ஹாலிவுட் மேக்அப் மேன்களை வைத்து படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. இயக்குனர் ஷங்கர் தனது படங்களில் இதற்காக மெனக்கெடுவதுடன் ஹாலிவுட் தொழில் நுட்ப கலைஞர்களை இதற்காக பயன்படுத்துகிறார். கமல்ஹாசன் இதில் முன்னோடி என்று சொல்லலாம். தற்போது ஸ்டண்ட் மாஸ்டர்கள், மேக் அப் கலைஞர்கள், கிராபிக்ஸ் வல்லுனர்கள் என ஹாலிவுட் டெக்னீஷியன்களின் கைவண்ணத்தை அவ்வப்போது தமிழ் படங்களில் பார்க்க முடிகிறது.
பீப் பாடல் சர்ச்சையை ஒருபுறம் எதிர்கொண்டபோதும் தனது படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார் சிம்பு. ‘திரிஷா இல்லன்னா நயன்தாரா’ பட இயக்குனர் அதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள புதிய படத்தில் 3 வேடத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இதற்காக அவருக்கு விதவிதமான கெட்டப்பை அமைப்பதற்காக ஹாலிவுட் மேக் அப் மேன் சீன் ஃபுட் வரவழைக்கப்பட்டிருப்பதுடன் மேக் அப் டெஸ்ட் நடத்தப்படுகிறது. ‘லார்ட் ஆப் தி ரிங்ஸ்’ படத்தில் பணியாற்றிய இவர் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்திலும் பணியாற்றுகிறார்.