யாரு மேல கோவமோ தெரியல... காத்திருந்த மாணவிகளிடம் அமைச்சர் சுந்தர்ராஜ் சிடுசிடு
3/4/2025 2:40:56 PM
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தை விளையாட்டு துறை அமைச்சர் சுந்தர்ராஜ் மாலை 4 மணிக்கு பார்வையிடுவதாக இருந்தது. ஆனால் அவர் இரவு 7.45 மணிக்குத்தான் அங்கு வந்தார். பின்னர் அவர் விளையாட்டு விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர், ஒவ்வொருவருக்கும் தினமும் ரூ.250 வீதம் அரசு செலவு செய்கிறது. இங்க நீங்க சாப்பிட வரல; திறமையாக விளையாடி பதக்கத்தை வெல்ல வேண்டும் என்று மிரட்டும் தொனியில் பேசினார்.
அங்கிருந்த கரூரை சேர்ந்த மாணவியிடம், உங்கள் எம்எல்ஏ யார் என்று வினவினார். அப்போது அந்த மாணவி, பயந்தபடியே செந்தில்பாலாஜி என்று கூறினார். இதிலுமா சந்தேகம் என்று அவரிடம் பாய்ந்த அமைச்சர், உங்கள் எம்எல்ஏ செந்தில் பாலாஜிதான்; அமைச்சர் பதவியில் இருந்து எடுத்துவிட்டால் எம்எல்ஏ கிடையாதா என்று அதட்டினார். அத்துடன் ‘விளையாட்டில் வெற்றிபெறுவதற்காக பல ஆயிரம் ரூபாய் செலவழித்தும் நீங்கள் பதக்கம் பெறாமல் இருந்தால் உங்களை என்ன செய்ய?’ என்று கடுமையாகச் சாடினார். இவ்வாறு அமைச்சர் கடுகடுப்புடன் எரிந்து விழுந்ததால் மாணவிகள் அனைவரும், ‘அடுத்து தங்களிடம் என்ன கேட்பாரோ?’ என்று அச்சத்துடன் கண்கலங்கி நின்றனர்.
விளையாட்டு விடுதி மாணவிகளைத் தொடர்ந்து, பெண் பயிற்சியாளரிடம் ‘எத்தனை மணிக்கு பயிற்சி அளிக்க வருவீர்கள்?’ என்று கேட்டார். அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வாஞ்சிநாதன், ‘அவர் காலை 6 மணிக்கெல்லாம் வந்துவிடுவார்’ என்றார். அதற்கு அமைச்சர், நான் உங்களிடம் (டிஎஸ்ஓவிடம்) கேள்வி கேட்கவில்லை, சம்பந்தப்பட்டவர் தான் பதில் கூற வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து, அதே பதிலை பெண் பயிற்சியாளர் கூறினார்.
அவர் மீதும் எரிந்து விழுந்த அமைச்சர், ஏராளமான போட்டிகளில் வெற்றிபெற்று அதிக அளவில் பதக்கம் பெறும் வகையில் மாணவிகளை தயார் படுத்தாதது சரியா என்று திட்டி தீர்த்தார்.அமைச்சரின் வருகைக்காக கால்கடுக்க நின்ற மாணவிகளிடம் லேட்டாக வந்த அமைச்சர் கடுகடுப்புடன் நடந்துகொண்டதால் அவர்கள் அச்சத்துடன் கண்கலங்கி அழுத சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியது.