மதுராந்தகத்தில் விவசாய சங்கங்களின் ஆலோசனை கூட்டம்
3/4/2025 2:22:18 PM
மதுராந்தகம்: விவசாயிகளின் கடன் விடுதலை மற்றும் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மதுராந்தகத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூட்டியக்க நிர்வாகி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். வெங்கடேசன் முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் பழனிச்சாமி, தெய்வசிகாமணி, உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சுப்பிரமணியம், கோபால கிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இதில், ‘ரயில்வே பட்ஜெட்டை போல வேளாண்மை துறைக்கு தனியே பட்ஜெட் போட வேண்டும். வேளாண்மைக்காக பெறப்பட்ட வங்கி கடன்களை மத்திய மற்றும் மாநில அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். இயற்கை வேளாண்மைக்கு முன்னுரிமை தந்து, பாரம்பரிய உர உற்பத்திக்கான கட்டமைப்புகளை உருவாக்கித் தரவேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் தனி பயிர் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்த வேண்டும். பாலாறு மற்றும் துணை ஆறுகளில் தடுப்பணைகளை கட்டி நீராதாரத்தை பெருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் சாதி பேதமின்றி, சிறு-குறு விவசாயிகள் என்கிற வித்தியாசம் இன்றி அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.
தேசிய ஊரக வேலை அளிப்பு திட்டத்தை வேளாண்மைக்கு பயன்படும் வகையில் அமைக்க வேண்டும். மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசு நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக தொடங்க வேண்டும்’ என்பது உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் காசியண்ண கவுண்டர், பேராசிரியர் நடராஜன், சோழனூர் ஏழுமலை மற்றும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.