பிரசார கூட்டம் நடக்கும் இடங்களில் மது விற்பனை அதிகரிக்காவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை
3/3/2025 2:56:17 PM
கோவை, -பிரசார பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனை அதிகரிக்காவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள 6,826 டாஸ்மாக் மதுபான கடைகள் மூலம் தினமும் பல கோடிக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இந்த நிலையில், மதுபான விற்பனையை 3 மடங்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கடந்த காலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 வகையான மதுபானங்களை விற்பனைக்கு கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இதன்படி 88 ரூபாய் முதல் 120 ரூபாய் வரையிலான குறைந்த விலை மதுபாட்டில்களை கடைகளில் 60 சதவீதம் இருப்பு வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபாட்டில்கள் தேவை, இருப்பு குறித்து தினமும் ஆய்வு நடத்தி குடோன் நிர்வாகத்திற்கு தகவல் தரவேண்டும், குறைந்த விலை மதுபாட்டில் இல்லை என புகார் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஊழியர்களை டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. கடைகளில் பெட்டியை வைக்க கடையை ஒட்டியுள்ள காலி அறைகளில் இருப்பு வைக்க டாஸ்மாக் நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
பொதுக்கூட்டம், மாநாடு மற்றும் கட்சி தலைவர்கள் பிரசாரத்தின்போது சம்பந்தப்பட்ட எல்லையில் உள்ள மதுக்கடைகளில் மது விற்பனை 20 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாம். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் மது விற்பனை உச்சத்தை எட்டாவிட்டால் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் சூபர்வைசர் ஒருவர் தெரிவித்தார்.