உற்பத்தியாளர்களுக்கு பாக்கி எதிரொலி- ஆவின் பால் கொள்முதல் 3 லட்சம் லிட்டர் குறைந்தது: பொதுமக்களுக்கு பால் விநியோகிப்பதில் சிக்கல்
3/3/2025 2:40:17 PM
சென்னை, -ஆவின் நிர்வாகம் பால் உற்பத்தியாளர்களுக்கு கடன் வைத்துள்ளதால், தனியார் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் பாலை கொடுக்கின்றனர். இதனால், கடந்த ஒரு மாதத்தில் படிப்படியாக 3 லட்சம் லிட்டர் கொள்முதல் குறைந்துள்ளது. ஆவின் நிறுவனம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து வந்தது. தற்போது 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது. தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.2 உயர்த்தியுள்ளதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 95 சதவீதம் பசும்பாலாகும், வெறும் 5 சதவீதம் மட்டுமே எருமைபால். ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக முறையாக பணம் பட்டுவாடா செய்யவில்லை. இதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் ஆவின் நிறுவனத்துக்கு ஊற்றி வந்த பாலில் பெருமளவு தனியார் நிறுவனங்களுக்கு ஊற்ற தொடங்கிவிட்டனர். ஆவின் நிர்வாகம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் கொள்முதல் செய்தபோது, 22 லட்சம் லிட்டரை பாலாக விற்பனை செய்தது. மீதமுள்ள 8 லட்சம் லிட்டர் பாலை பால் பொருட்களாக உற்பத்தி செய்து வந்தது.
இதில் பால் பவுடரும் அடங்கும். வெளிநாட்டு பால் பவுடர் விலையை காட்டிலும் ஆவின் பால் பவுடரின் விலை கூடுதலாக இருந்ததால் பால் பவுடர் விற்பனை செய்ய முடியாமல் சுமார் 12 ஆயிரம் டன் பால் பவுடர் தேங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆவின் பால் பவுடர் இலவசமாக வழங்கப்பட்டது. ஆவின் பார்லர்களில் ஒரு பாக்கெட் பால் பவுடர் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என்ற அறிவிப்பை வெளியிட்டு பால் பாக்கொட்டை ஆவின் நிர்வாகம் விற்பனை செய்தது. மேலும், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு மொத்தமாக விற்றதில் சுமார் 4 ஆயிரம் டன் பால் பவுடர் காலியானது.
தற்போது 8 ஆயிரம் டன் பால் பவுடர் கையிருப்பில் உள்ளது. இதேபோல் 4 ஆயிரம் டன் வெண்ணெய் கையிருப்பு உள்ளது. பால் பவுடர் மற்றும் வெண்ணெய் விற்பனையாகாமல் தேங்கியதால், பால் உற்பத்தியாளர்களுக்கு ஒழுங்காக பணம் செலுத்த முடியாத நிலை ஆவின் நிர்வாகத்துக்கு ஏற்பட்டது. இதனால், பால் கொள்முதல் விலை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என, தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் ஊற்றி வருகின்றனர். தனியார் நிறுவனங்கள் பாலுக்குரிய தெகையை வாராவாரம் ஒழுங்காக கொடுத்துவிடுகின்றன. இதன் காரணமாக தனியார் பால் நிறுவனங்களுக்கு பால் உற்பத்தியாளர்கள் பாலை கொடுப்பதால் ஆவின் பால் கொள்முதல் கடந்த ஒரு மாதத்தில் 3 லட்சம் லிட்டர் குறைந்து போய் இருப்பது தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக ஆவின் மூலம் சீராக பொதுமக்களுக்கு பால் விநியோகம் செய்வதில் சிக்கல் எழுந்துள்ளது.