வேலூரில் 28 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கம்
3/3/2025 2:39:27 PM
வேலூர், -இறந்த வாக்காளர் பெயர்கள், இரட்டைப்பதிவுகள், வெளியூர் சென்றவர்கள், நீக்கப்பட்டவர்கள் என வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டது. பிப்ரவரி 15ம் தேதி முதல் 29ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடியை நீக்க வீடுகள்தோறும் சென்று ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டது.அதன்படி, வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் போலியாக உள்ள பதிவுகளை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்பணியில் 3 ஆயிரத்து 439 வாக்குச்சாவடி நிலைஅலுவலர்கள் ஈடுபட்டனர். பட்டியலை சிறப்பு கிராம சபா கூட்டம் நடத்தி நீக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.வேலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் 743 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடந்தது. அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்க உத்தேசிக்கப்பட்டுள்ள விபரங்கள் கிராம சபாவில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.
பெயர் நீக்கம் செய்யப்படும் பட்டியலில் ஆட்சேபம் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பெயர் நீக்கம் செய்யும் விபரங்களுக்கு கிராம சபாவின் ஒப்புதலும் பெறப்பட்டது.
இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இறந்த வாக்காளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் 15 ஆயிரத்து 336 வாக்காளர்கள் இறந்த வாக்காளர்களும், 12 ஆயிரத்து 530 இரட்டை பதிவு வாக்காளர்களும், 583 இடமாற்றம் வாக்காளர்களும், 387 வாக்காளர்கள் புகைப்படங்களில் இடம் மாற்றி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 28 ஆயிரத்து 836 வாக்காளர்களின் பெயர்களை தேர்தல் ஆணையம் நீக்க உத்தரவிட்டுள்ளது.