அதிமுக வழங்கிய அம்மா ஹெல்மெட் - பயனாளிகள் முகம் சுளிப்பு
3/3/2025 2:36:04 PM
கடலூர், -கடலூரில் மக்கள் பயன்பாடு இல்லாத நிலையில் அதிமுகவினர் அம்மா ஸ்டிக்கர் போட்ட ஹெல்மெட் வழங்கினர்.கடலூர் மாவட்டத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக தரப்பு ஜெ பிறந்த நாள் போர்வையில் நலத்திட்டம் என்ற வகையில் பரிசு பொருட்களை வழங்குவதாக கூறி பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி வருகின்றனர்.ஆனால் விழாவுக்கு அழைத்து செல்லப்படும் மக்களின் நிலை ஏமாற்றத்தை பிரதிபலிக்க செய்து வருகிறது. பல மணிநேரம் மக்களை காக்க வைப்பதும் நல உதவி அனைவருக்கும் வழங்காததும் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு அதிர்ச்சி தருகிறது.
அதேபோல் முடிக்கப்படாத பணிகள் முடிந்ததாக அறிவித்து திறப்பு விழா நடத்தப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையடையாத நிலையில் ஒரே நாளில் அவை மூடு விழாவும் கண்டு வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கடலூர் முதுநகரில் ஹெல்மெட் வழங்கும் விழா ஜெ பேரவை சார்பில் நடத்தப்பட்டது. கட்டாயமாக்கப்பட்ட ஹெல்மெட் தற்போது காட்சி பொருளாக கூட இல்லாமல் மாயமான நிலையில், இலவசமாக ஹெல்மெட் வழங்கியது பயனற்ற நிலையே ஏற்படுத்தியது. வழங்கப்பட்ட ஹெல்மெட்டில் அதிமுக கட்சி கொடியின் நடுவில் ஜெ படத்துடன் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இது தேர்தல் பிரசாரத்திற்கு பிரத்யேகமாக வழங்கப்பட்ட ஹெல்மெட் போல் காட்சியளித்தது. பல்வேறு வகையில் ஹெல்மெட் அணிந்து பைக்கில் வலம் வரும் இளைஞர்களுக்கு அம்மா ஸ்டிக்கர் ஹெல்மெட் வழங்கப்பட்ட நிலையில் வாங்கி கொண்டவர்கள் அதை பயன்படுத்த முகம் சுளித்தனர்.