எமெர்ஜென்சி கோட்டா பதிவுக்கு டோல் ப்ரீ எண் 138க்கு பேசுங்கள் - ரயில்வேயில் புதிய நடைமுறை
3/2/2025 2:28:18 PM
நாகர்கோவில், -எமெர்ஜென்சி கோட்டாவில் பதிவு செய்ய புதிய நடைமுறையை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ரயில்களில் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கைகளை முன்பதிவு செய்ய புதிய நடைமுறைகளை தெற்கு ரயில்வே அறிமுகம் செய்துள்ளது. தாழ்வான நிலையில் உள்ள படுக்கை வசதியை விரும்புகின்ற முதியோர், கர்ப்பிணிகள், கடைசி நேரத்தில் ரயில் பயணத்திற்கு திட்டமிடுகின்ற அரசு பணியாக செல்வோர், உடல்நிலை கோளாறு, நேர்முக தேர்வு போன்றவற்றுக்கு செல்வோர் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கை வசதி கேட்கின்றனர்.
இவர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்படுகிறது. இதனை களையும் வகையில் ரயில்வேயால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தின் கீழ் எமெர்ஜென்சி கோட்டாவில் இருக்கை பதிவு செய்ய கோட்ட முதுநிலை வணிக மேலாளரை அணுக வேண்டும். பயணத்திற்கு 2 நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பதாரர் நேரடியாக அல்லது தனக்கு வேண்டியவர்கள் மூலமாக நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அல்லது 0471 2326482 என்ற பேக்ஸ் எண்ணிலோ அல்லது [email protected] என்ற இ-மெயில் முகவரியிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் கண்டிப்பாக எதற்காக எமெர்ஜென்சி கோட்டாவை கோருகிறோம் என்பதற்கான அடையாள ஆவணம் ஒன்றை இணைக்க வேண்டும். நேர்முக தேர்வுக்கான அழைப்பு கடிதம், மருத்துவ காரணங்கள் என்றால் மருத்துவரின் மருத்துவ சான்றிதழ் போன்றவற்றை இணைக்கலாம்.
மேலும் ஹெல்ப் லைன் எண் 0471 2326484 காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் செயல்பாட்டில் இருக்கும். புகார்களை 138 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் தெரிவிக்கலாம்.இவ்வாறு செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.