ஆப்பூரில் நாளை திமுக மாநாடு : பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி : தா.மோ.அன்பரசன் ஆய்வு
2/20/2016 12:25:09 PM
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆப்பூரில் திமுக மாநாடு நாளை நடைபெற உள்ளது. இதற்காக 500 ஏக்கர் பரப்பளவிலான பந்தல் அமைக்கும் பணியை மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் ஆய்வு செய்தார். காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட ஆப்பூரில் திமுக சார்பில் உறுதி முழக்க பேரணி, பொதுக்கூட்டம் நாளை மதியம் நடைபெற உள்ளது.
காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் தலைமை வகிக்கிறார். தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் முன்னிலை வகிக்கிறார். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். இதில், முதன்மை செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு, ஆர்.காந்தி, ஜெ.அன்பழகன், கி.வேணு, மா.சுப்பிரமணியன், எஸ்.சுதர்சனம் உள்ளிட்ட 13 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர். கடந்த 10 நாட்களாக ஆப்பூரில் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை மாவட்ட செயலாளர் தா.மோ.அன்பரசன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மாநாட்டு பந்தல் 150 அடி அகலத்தில் 40 அடி நீளத்தில் மிக பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மாநாட்டு பந்தலில் 300 ஏக்கர் பரப்பளவிலான இடம் கட்சி நிர்வாகிகள் அமர்வதற்கும், 200 ஏக்கர் பரப்பளவிலான இடம் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இங்கு நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசார நிறைவு கூட்டம் நடைபெற உள்ளது. காஞ்சி வடக்கு மாவட்டத்தின் சார்பில் 2 லட்சம் பேர் கலந்து கொள்கின்றனர். மதியம் 2 மணிக்கு பேரணி தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகை தரும், மு.க.ஸ்டாலினை வரவேற்கும் விதமாக கிண்டி கத்திப்பாராவில் இருந்து மாநாட்டு திடல் வரை தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. 25 சதவீதம் மகளிர் அணியை சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குடிநீர், உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.
அவருடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், ஆப்பூர் ஊராட்சி மன்ற தலைவருமான வரலட்சுமி மதுசூதனன், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர் தண்டபாணி, மறைமலைநகர் நகர செயலாளர் ஜெ.சண்முகம், செங்கல்பட்டு நகர செயலாளர் நரேந்திரன், செங்கல்பட்டு நகரமன்ற தலைவர் அன்புச்செல்வன், ஒன்றிய செயலாளர் மனோகரன், ஆப்பூர் சந்தானம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், ஊராட்சி செயலாளர் ரவிச்சந்திரன், ஊராட்சி செயலாளர் தர்மன், நகர இளைஞரணி செயலாளர் டி.கே.கமல், வினோத், பரணி, ஆல்பர்ட், செங்கல்பட்டு இளைஞரணி அமைப்பாளர் சந்தோஷ், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா உள்பட பலர் உடன் இருந்தனர்.