முத்தாலம்மன் கோயில் கும்பாபிஷேகம்
2/19/2016 2:48:50 PM
ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம் ஒரத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழக்கழனி கிராமத்தில் பழமையான ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் உள்ளது. இதை சீரமைக்கும் பணி கடந்த ஆண்டு துவங்கியது. கோயில் வளாகத்தில் ஸ்ரீவிநாயகர், பாலமுருகர், துர்கை, மகாலட்சுமி, ப்ராம்மினி, வைஷ்ணவி, கருமாரி அம்மன் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.இக்கோவில் கும்பாபிஷேகம் கணபதி பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. அம்மனுக்கு 4 கால பூஜை, கும்பலங்காரம், விக்ரஹங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
அம்மனுக்கு விபூதி, சந்தனம், மலர் அலங்காரம், தேன், இளநீர், பால், தயிர் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இன்று காலை 8.30 மணிக்கு கோயில் கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள கலசத்திற்கு, புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டன.இதில் ஒரத்தூர் ஊராட்சி தலைவர் கற்பகம் சுந்தர், துணைத் தலைவர் துளசி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சுந்தர், வனக்குழு தலைவர் சுபாஷ் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.