கடந்தாண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவை 26 லட்சம் பேர் ரசிப்பு
1/2/2025 12:27:43 PM
ஊட்டி: கடந்தாண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவை 26 லட்சத்துக்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ரசித்துள்ளனர்.சர்வதேச சுற்றுலா நகரமான நீலகிரி மாவட்டத்தில் நிலவும் குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தொடர் அரசு விடுமுறை நாட்கள், பள்ளி, கல்லூரிகளின் தேர்வு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.இவ்வாறு வருகின்ற சுற்றுலா பயணிகள் ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ் வாய்ந்த தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டப்பெட்டா மலை சிகரம், பைக்காரா படகு இல்லம் போன்ற பகுதிகளை பார்த்து மகிழ்வார்கள். அவர்களை மகிழ்விக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலைத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் ரோஜா மலர் கண்காட்சி, படகு அலங்கார அணிவகுப்பு மற்றும் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படும். மலர் கண்காட்சி நடக்கும் இரண்டு நாட்கள் மட்டும் தாவரவியல் பூங்காவிற்கு ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிவார்கள்.கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை தாவரவியல் பூங்காவை 26 லட்சத்து 15 ஆயிரத்து 768 சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டை விட 4 லட்சத்து 78 ஆயிரத்து 901 பேர் கூடுதலாக தாவரவியல் பூங்கா வந்துள்ளனர்.