சென்னை, புறநகர் பகுதி சாலைகளில் பரிதாப நிலையில் சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பு பணியில் தொய்வு
1/2/2025 12:24:06 PM
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதைத் தடுக்க, சென்னை மாநகர போலீசாரால் ஏராளமான சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டன. அந்த சிசிடிவி காமிராக்களை அந்தந்த பகுதி காவல்நிலையங்களில் போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். தற்போது அந்த சிசிடிவி காமிராக்கள் அனைத்தும் பரிதாபமான நிலையில் தொங்கிக் கொண்டிருக்கிறது.சென்னை நகரில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், வாகன ஓட்டிகளை சாலை விதிகளை மீறுவதைத் தடுக்கவும் முக்கிய சாலை சந்திப்புகளில் மற்றும் டிராபிக் சிக்னல் அருகே லட்சக்கணக்கான மதிப்பீட்டில் சிசிடிவி காமிராக்களை போக்குவரத்து போலீசார் அமைத்தனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்த சிசிடிவி காமிராக்கள் அனைத்தும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், அந்தந்த பகுதி காவல்நிலைய கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஸ்கிரீன் மூலம் போலீஸ் அதிகாரிகள் கண்காணித்து வந்தனர்.சென்னை நகரில் ராதாகிருஷ்ணன் சாலை, லஸ் கார்னர், ஆழ்வார்பேட்டை, அடையாறு, புரசைவாக்கம், எழும்பூர், பெரம்பூர், வடபழனி, கிண்டி கத்திபாரா மேம்பால சந்திப்பு, சைதாப்பேட்டை, தி.நகர் பஸ் நிலையம் மற்றும் ரங்கநாதன் தெரு, போத்தீஸ் அருகே உஸ்மான் சாலை சந்திப்பு, பாண்டிபஜார், அண்ணாசாலை ஸ்பென்சர் சாலை சந்திப்பு, அமெரிக்க தூதரகம் அருகே, தேனாம்பேட்டை சிக்னல், குறளகம் மற்றும் பிராட்வே பஸ் நிலையம் அருகே, பூக்கடை காவல் நிலையம் அருகே என்எஸ்சி போஸ் சாலை சந்திப்பு, மெரினா மற்றும் டிஜிபி அலுவலகம் அருகே என பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் ஏராளமான சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டன.
சிறிது நாட்களுக்கு மட்டுமே இந்த சிசிடிவி காமிராக்கள் மூலம் போக்குவரத்து போலீசார் கண்காணித்து துரித நடவடிக்கைகளை எடுத்து பாராட்டுகள் பெற்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த சிசிடிவி காமிராக்கள் பரிதாப நிலையில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பலவற்றில் காமிராக்கள் உடைந்து விழுந்ததால், வெறும் மேல்மூடிகள் மட்டுமே பரிதாப நிலையில் உள்ளன.சென்னை நகரின் பெரும்பாலான சாலை சந்திப்புகளில் சிசிடிவி காமிராக்களே இல்லை. அப்படியே இருந்தாலும் அவை செயல்படாத நிலையில்தான் உள்ளது. இதனால் அப்பகுதிகளில் நடைபெறும் விபத்து மற்றும் குற்ற சம்பவங்களை போக்குவரத்து போலீசாரால் தடுக்கவோ அல்லது போக்குவரத்தை சீரமைக்கவோ முடியவில்லை. இதனால் அப்பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது என்று பெரும்பாலான வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் லஸ் கார்னர் சந்திப்பு, வள்ளுவர் கோட்டம் மற்றும் ஸ்டர்லிங் சாலை சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஒருவழி பாதையாக மாற்றப்பட்டும், அந்த சிக்னல்கள் 4 வழிகளையும் காட்டி வருகின்றன. இதனால் 4 பக்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் நடுரோட்டில் முட்டி மோதிக் கொள்கின்றன.இங்குள்ள சிசிடிவி காமிராவும் செயல்படவில்லை. சென்னை நகர காவல் பிரிவில் புதிதாக அறிமுகமான நடமாடும் நவீன காமிரா கண்காணிப்பு வாகனமும் காணாமல் போய்விட்டது. இதனால் எங்களுக்கு வேலைப் பளுவும் கடும் மன அழுத்தமும் ஏற்பட்டு வருகிறது என்று போக்குவரத்து போலீசாரே புலம்பி வருகின்றனர்.சென்னை நகரில் இயங்காத சிசிடிவி காமிராவின் பரிதாப நிலை மற்றும் போக்குவரத்து சிக்னல்களின் குளறுபடி குறித்து காவல்துறையை சேர்ந்த சிலரிடம் விசாரித்தோம்.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து சிக்னல்கள் அருகே கடந்த 2012-ம் ஆண்டு இறுதியில் சுமார் ரூ. 150 கோடி மதிப்பீட்டில் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிக்கு சொந்தமான தனியார் நிறுவனம் ஒன்று சிசிடிவி காமிராக்களைப் பொருத்தியது. இப்பணிகளுக்காக அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையை அரசு வழங்கவில்லை.தரமான பொருட்களை கொண்டு சிசிடிவி காமிரா அமைக்கும் பணிகள் நடைபெறவில்லை என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது. அந்நிறுவனம் சிசிடிவி நிர்மாணித்த தொகைகளை வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இவற்றை ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை நகரின் பல்வேறு இடங்களில் சிக்னல்களில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி காமிராவால் தற்போது எந்த பயனும் இல்லை. சிசிடிவி காமிரா பொருத்தும் பணிகள் அனைத்தும் காவல்துறை தொழில்நுட்பப் பிரிவின் மூலம் ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் நிறைவேற்றப்படுகிறது.இந்நிலையில், சென்னை நகரில் பழுதான சிசிடிவி காமிராக்களை அகற்றி புதிய சிசிடிவி காமிராக்களை அமைப்பது தொடர்பாக இன்னும் சில நாட்களில் காவல்துறை சார்பில் டெண்டர் கோரப்பட உள்ளது. எனினும், இந்த டெண்டரில் தரமான காமிராக்களை வழங்கும் பெரிய நிறுவனங்கள் கலந்துகொள்ள முன்வரவில்லை என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை நகரில் சிசிடிவி காமிராக்களை அமைக்கும்போது, அவற்றை தரமணியில் உள்ள போலீஸ் தர பரிசோதனை அலுவலகம் முறையாக பரிசோதிப்பதில்லை. இதனால் தரமற்ற நிறுவனங்களிடம் இருந்து சிசிடிவி காமிராக்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.இந்த சிசிடிவி காமிராக்கள் சிறிது நாட்களிலேயே செயலிழந்து, தற்போது வெறும் எலும்புக் கூடாக காட்சியளிக்கிறது இவை அனைத்துக்கும் காவல்துறை தொழில்நுட்ப பிரிவின் உயர் அதிகாரிதான் காரணம் என்று காவல்துறை நண்பர்கள் கவலையைத் தெரிவித்தனர்.‘இனிமேலாவது சென்னை நகரின் பல்வேறு முக்கிய சாலை சந்திப்புகளில் பழுதடைந்த நிலையில் தொங்கிக் கொண்டிருக்கும் சிசிடிவி காமிராக்களையும் சிக்னல்களையும் அகற்றி, தரமான நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கி, அவர்களையே முறையாக பராமரிப்பதற்கும் தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கலாமே?’ என்று காவல்துறை மேல் நம்பிக்கை வைத்துள்ள மக்கள் கூறுகின்றனர்.