நெரிசலில் திணறும் ஆற்காடு சாலை ஆக்கிரமிப்பு, மக்கள் அவதி
12/22/2015 2:09:47 PM
சென்னை நகரில் இருந்து புறநகர் பகுதிகளான வளசரவாக்கம், போரூர், குன்றத்தூர், பூந்தமல்லி போன்ற பகுதிகளுக்கு செல்பவர்களுக்கு வடபழனி இதயப் பகுதியாக விளங்கி வருகிறது. கோடம்பாக்கம் மேம்பாலத்தில் இருந்து துவங்கும் ஆற்காடு சாலை வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம், ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் போரூர் வரை பரந்து விரிந்துள்ளது.அக்காலத்தில் ஆற்காடு சாலை வழியாக செல்லும் பிரபல நடிகர், நடிகைகளை காண ஏராளமான மக்கள் வாகனங்களில் காத்திருப்பர். ஆனால், தற்போது வடபழனியில் 100 அடி சாலை வந்த பிறகு, ஆற்காடு சாலையில் நாள்தோறும் ஏற்படும் வாகன நெரிசலில் ஏராளமான வாகனங்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றன.
வடபழனியில் இருந்து துவங்கும் ஆற்காடு சாலையில் பல்வேறு இடங்கள் குறுகலாகவும், சில இடங்களில் அகலமாகவும் காட்சி அளிக்கின்றன. குறுகலான பகுதியிலும் சென்டர் மீடியன் போடப்பட்டு உள்ளதால், அவை மேலும் குறுகிவிட்டன.வடபழனி 100 அடி சாலையில் கோயம்பேடு வழியாக செல்லும் வாகனங்கள் இரவுபகலாக புற்றீசல் போல் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவை காலை மற்றும் மாலை நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த மன நெருக்கடியை ஏற்படுத்தி வருகின்றன.வடபழனி பகுதியில் மாலை மற்றும் இரவு நேரங்களில் 100 அடி சாலையை மிகுந்த பிரயாசையுடன் கடந்துவிட்டால், கமலா திரையரங்கம் எதிரே உள்ள தனியார் ஷாப்பிங் மால் திரும்புவதற்காக ஏராளமான வாகனங்கள் சாலையில் நிற்கின்றன.
இதைக் கடந்துவிட்டால், வடபழனி பேருந்து நிலையம் அருகே குமரன் காலனி மற்றும் சாலிகிராமத்தின் உட்பகுதிகளுக்கு செல்ல ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன. கமலா திரையரங்கம் முதல் வடபழனி பேருந்து நிலையம் வரை இருபக்கமும் சாலை குறுகலாக உள்ளது.அதையும் தாண்டி குறுகலான சாலையைக் கடந்துவிட்டால், சாலிகிராமம் செல்லும் சாலை திருப்பத்தில் சிக்னலுக்காக ஏராளமான வாகனங்கள் காத்திருக்கின்றன.இவற்றை கடந்துவிட்டால், விருகம்பாக்கம் பகுதியில் குறுகலான சாலை திருப்பத்தில் மேற்கு கே.கே.நகரிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் ஆற்காடு சாலையில் வரும் வாகனங்கள் முட்டி மோதிக் கொள்கின்றன.
இதேபோல் ஆழ்வார் திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம் மற்றும் போரூர் வரை சாலை குறுகலாக மாறிவிட்டன.‘வடபழனியில் இருந்து போரூர் வரை செல்லும் ஆற்காடு சாலையின் பெரும்பான்மை பகுதிகள்தனியார் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கு வணிக வளாக கட்டிடங்களும் வீடுகளும் கட்டியுள்ளனர். இதில் ஆழ்வார் திருநகரில் தனியார் பள்ளியின் காம்பவுண்ட் சுவரும் ஆற்காடு சாலையை ஒட்டியே உள்ளது.இந்த சாலை ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றினால்தான், ஆற்காடு சாலையில் நாள்தோறும் ஏற்படும் வாகன நெரிசலை வெகுவாக குறைக்க முடியும். இதற்கு அனைத்து கட்சியினரும் பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்’ என்று பல்வேறு சமூகநல ஆர்வலர்களும் காவல்துறையை சேர்ந்தவர்களும் வேதனையுடன் கூறுகின்றனர்.
‘வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள தனியார் ஷாப்பிங் மால் மற்றும் நட்சத்திர ஓட்டலுக்கு குறிப்பாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமானவர்கள் கார்களில் வருகின்றனர். அவர்கள் வலதுபுறம் திரும்புவதற்கு வெகுநேரம் எடுத்துக் கொள்கின்றனர்.இதேபோல், வடபழனி பேருந்து நிலையம் அருகே குமரன் காலனி மற்றும் சாலிகிராமம் பகுதிகளுக்கு செல்பவர்கள் ‘யு’ டேர்ன் செய்வதற்கு போதிய இடம் இல்லாததால், போரூரில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் உட்பட ஏராளமான வாகனங்கள் மணிக்கணக்கில் காக்க வேண்டிய அவலநிலை உள்ளது.100 அடி சாலை, கமலா திரையரங்கம், வடபழனி பேருந்து நிலையம் மற்றும் சாலிகிராமம் திருப்பத்தில் ஏற்படும் வாகன நெரிசல், ஆற்காடு சாலையில் விருகம்பாக்கம் வரை நீள்கிறது.
இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த வாகன நெரிசலில் பல சமயம் ஆம்புலன்ஸ்கள்கூட சிக்கிக்கொள்கின்றன. இதனால் பல நோயாளிகள் தகுந்த நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் இறந்த சம்பவங்களும் நடைபெற்று உள்ளது’ என்று ஆழ்வார் திருநகரை சேர்ந்த வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.‘ஆற்காடு சாலையில் நாள்தோறும் ஏற்பட்டு வரும் வாகன நெரிசலை குறைப்பதற்கும், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் சம்பந்தப்பட்ட காவல், போக்குவரத்து, வருவாய் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு தீவிர நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்று நாள்தோறும் வாகன நெரிசலில் சிக்கி தவிக்கும் மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.இனியாவது ஆற்காடு சாலையில் வாகன நெரிசல் தீருமா? அல்லது, ‘அது ஒரு தொடர்கதை’யாக மாறி மக்களையும் வாகன ஓட்டிகளையும் வேதனைப்படுத்தி வருமா? இதற்கு தமிழக அரசுதான் தீர்வு காணவேண்டும்.