கொரட்டூர் பகுதிகளில் தேங்கும் கழிவுநீரால் தொற்றுநோய் அபாயம் : அதிகாரிகள் மெத்தனத்தால் மக்கள் அவதி
12/19/2015 12:07:03 PM
சென்னை கொரட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையினால் ஏராளமான வீடுகளை சுற்றிலும் மழைநீர் தேங்கியுள்ளது.இவற்றை அகற்றவேண்டிய சென்னை மாநகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளனர். இதனால் இப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள அம்பத்தூர், ஆவடி, கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்தது. இதையடுத்து அம்பத்தூர் ஏரி நிறைந்து, அதன் உபரி நீர் கொரட்டூர் பகுதியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது.இதன் காரணமாக. கொரட்டூர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மற்றும் பல்வேறு கிராமப் பகுதிகள் முழுவதும் உள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
இதனால் அப்பகுதி மக்கள் உணவு, மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வந்தனர். அத்துடன் வீடுகளில் இருந்த டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது.இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக மழை ஓய்ந்து, சென்னை நகர மக்களின் இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பி கொண்டிருக்கிறது.ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு இடங்களில் இருக்கும் வீடுகளைச் சுற்றிலும் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியவில்லை. அத்துடன் அதில் கழிவுநீரும் கலந்து, அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.
குறிப்பாக, கொரட்டூர் பகுதிகளான அன்னை நகர், கோபாலகிருஷ்ணன் நகர், திருமலை நகர், வனசக்தி நகர், டிவிஎஸ் நகர், ராஜீவ் நகர், விவேகானந்தா நகர், பாலாஜி நகர், என்ஏஎஸ் கார்டன், கண்டிகை, லேக்வியூ கார்டன், பத்மாவதி நகர், சுப்புலட்சுமி நகர், குமரன் நகர், காவ்யா நகர், கெனால் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுகளைச் சுற்றிலும் உள்ள காலி இடங்களில் மழைநீருடன் கழிவுநீரும் சூழ்ந்து உள்ளது. இதனால் அப்பகுதியில் கொசுக்கள் உற்பத்தியாகி மக்களை வாட்டி வருகிறது.மேற்கண்ட பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக தொடர் கொசுக்கடியால் பெரியவர் முதல் சிறியவர் வரை தூங்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் மலேரியா, டைபாய்டு உள்ளிட்ட பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
இவர்களுக்கு சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையால் எவ்வித மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படவில்லை. இதனால்தனியார் மருத்துவமனைகளில் தொற்று நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றோம் என்று அப்பகுதி மக்கள் கடுமையாக குற்றம் சாட்டுகின்றனர்.மேலும், இப்பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரில் பாம்புகள், பூரான்கள், தேள்கள் உள்ளிட்ட பல்வேறு விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.இங்கு தேங்கியுள்ள கழிவுநீரால் கொசுக்கடிகளுக்கு மக்கள் ஆளாகி, அவர்களுக்கு பல்வேறு தொற்றுநோய் பாதிப்பு அதிகரித்து உள்ளது.
கொரட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுகளை சுற்றி தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியும், அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாகச் செயல்படுகின்றனர்.மேலும், இங்குள்ள பல இடங்களில் சாலையோர மின்விளக்குகள் எரியாததால், இரவில் வேலை முடிந்து வரும் தொழிலாளர்களும், டியூஷன் முடித்து வீட்டுக்கு வரும் மாணவர்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.மேலும், பல இடங்களில் மழையினால் சாலைகள் சேதமடைந்து, சேறும் சகதியுமாக மாறி, தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இச்சாலையில் வரும் வாகன ஓட்டிகள் விழுந்து அடிபட்டு வருகின்றனர்.
எனவே, கொரட்டூர் பகுதியில் வீடுகளை சுற்றிலும் தேங்கி நிற்கும் கழிவுநீரை அப்புறப்படுத்தி, நோய் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டும்.அதேபோல், கொரட்டூர் பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை செப்பனிட்டு, அங்கு எரியாத தெரு மின்விளக்குகளை போர்க்கால அடிப்படையில் சென்னை மாநகராட்சியும் சம்பந்தப்பட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.இதேபோல், அம்பத்தூர் ஏரி நிறைந்து, அதன் உபரிநீர் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட கம்பெனிகளுக்குள் மழைநீர் புகுந்து, ரூ. 1800 கோடிக்கு சேதம் விளைவித்தது.
இதனால் அக்கம்பெனிகளை சார்ந்துள்ள உரிமையாளர்களுக்கும் பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் அங்கு பணிபுரியும் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டு உள்ளது.கடந்த ஒரு மாதம் தொடர் கனமழையால் அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள பல கம்பெனிகள் மூடப்பட்டு கிடந்தன. இதனால் அங்கு வேலை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களும் வருவாய் இன்றி குடும்பம் நடத்த சிரமப்பட்டு வருகின்றனர்.இதேபோல் அம்பத்தூர் எஸ்டேட்டை சுற்றியுள்ள பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியவில்லை. மேலும், அப்பகுதியில் கொசுக்கடி அதிகரித்திருப்பதால், அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்களின் அவலநிலையை தமிழக அரசு கருத்தில் கொண்டு, அவர்களின் அன்றாட இயல்பு நிலைக்கு திரும்பிவர மாவட்ட நிர்வாகத்தையும் சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளையும் முடுக்கிவிட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.அவர்களின் கோரிக்கை மிக விரைவில் நிறைவேறுமா? அல்லது, அவர்களின் வேதனை மேலும் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.