அதிகாரிகள் துணையுடன் குமரி மாவட்டத்தில் கனிமம் கொள்ளை : பொதுமக்கள் சரமாரி குற்றச்சாட்டு
11/30/2015 2:24:53 PM
புதுக்கடை: குமரி மாவட்டம் தேங்காப்பட்டணம் அருகே தண்டுமணி பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த இடத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் பாறை உடைத்துவந்தார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மற்ற 4 பேர் அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்து அனுமதியின்றி பாறை உடைப்பதாகசம்பந்தபட்ட துறை அதிகாரிகளுக்கும் தெரியவந்தது.இதையடுத்து அப்போதைய விளவங்கோடு தாசில்தார் லீலாபாய் சம்பவ இடம் சென்று விசாரித்ததில் அனுமதியின்றி பாறை உடைப்பதை கண்டுபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தனர். மாவட்ட புவியியல் மற்றும் சுரங்க துறையினர் தணிக்கை செய்தனர். இதுசம்பந்தமாக புதுக்கடை போலீசில் சம்பந்தபட்ட நபர்கள் மீது புகார் அளித்தனர்.
இதன்பிறகு பத்மனாபபுரம் கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் விசாரணை நடைபெற்றது. இதில் அனுமதியின்றி அரசு நிலத்தில் இருந்து பாறை உடைத்தது உறுதியானது. இதைத்தொடர்ந்து அனுமதியின்றி பாறை உடைத்ததாக ரவிசந்திரனுக்கு 4 கோடியே 24 லட்சத்து 16 ஆயிரத்து 730 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டன.இந்நிலையில் கடந்த சில தினங்களாக மீண்டும் அந்த பகுதியில் இருந்து பாறை உடைத்து கடத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக குமரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணியின் துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சதீஷ்குமார் கூறியதாவது: இதுபோன்ற பகுதிகளில் வருவாய் துறையினர் பக்கத்தில் உள்ள பட்டா நிலத்திற்கு அனுமதி வழங்கிவிட்டு அரசு நிலத்தில் பாறை உடைக்க வைக்கின்றனர்.
இது சம்பந்தமாக புகார் அளித்தாலும் கண்டு கொள்வதில்லை. வருவாய்துறை, கனிம வளத்துறை, வனத்துறை, காவல் துறையில் உள்ள சிலர் முழுமையாக உதவி செய்கின்றனர். குற்றம் சாட்டப்படும் பகுதியில் சென்று ஆய்வு நடத்துவது போல் நடித்து குறைந்த அளவு அபராதம் விதித்து, கோர்ட்டில் சமர்ப்பிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் கோர்ட்டில் ஆஜராகி எந்த ஆவணங்களையும் சமர்ப்பிப்பதில்லை. இதனால் வழக்கு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக முடியும் நிலை ஏற்படும். அதன் பிறகு மீண்டும் பழைய முறையில் லஞ்சம் கொடுத்து பாறை உடைக்கும் பணியை தொடர்கின்றனர். இது குமரி மாவட்டத்தில் பெரும் பான்மை இடங்களில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு சதீஷ்குமார் கூறினார்.முள்ளூர்துறை, ராமன்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:அரபி கடலின் அருகே 300 மீட்டர் தொலைவில் 500 மீட்டர் உயரத்தில் இந்த பாறை அமைந்துள்ளது. அரசு உத்தரவின்படி பாறை உடைக்கும் பகுதியில் இருந்து 500 மீட்டர் தொலைவில் எந்த குடியிருப்புகளோ, வழிபாட்டு தலங்களோ, பள்ளிகளோ இருக்க கூடாது. ஆனால் தண்டுமணியில் பாறைக்கு மிக அருகில் 100 மீட்டர் தொலைவில் தர்மசாஸ்தா கோவில் உள்ளது.இன்னும் சில ஆண்டுகளில் தண்டுமணி பாறை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். இதற்கு உடந்தையாக உள்ள அனைவரையும் விசாரிக்கவேண்டும். இதற்கு சகாயம் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளை நியமித்து விசாரிக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.