நாளை திறப்புக்கு தனியார் பள்ளிகள் ரெடி; அரசு பள்ளிகள் தயக்கம்
11/25/2015 3:03:47 PM
பூந்தமல்லி: தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்து வரும் தொடர் மழையால் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு அரசு தொடர் விடுமுறை அறிவித்தது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடந்த 8ம் தேதியில் இருந்து இன்று (நவ.25) வரை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்றும், இன்றும் மூன்று மாவட்டங்களிலும் மழை குறைந்து வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளது. பள்ளி கல்லூரிகள் நாளையோ அல்லது நாளை மறுநாளோ துவங்குவதற்கு அரசு உத்தரவிடலாம் என்ற நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகள், இயங்குவதற்கான ஆயத்த பணிகளை தொடங்கியுள்ளன.
இந்நிலையில் அரசு கல்வித்துறை வாயிலாக பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் மின்சார இணைப்புகளை சரிபார்த்தல், பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றுதல், பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் உள்ள மரங்கள் மற்றும் இடிபாடுகளை அகற்றி சுத்தம் செய்தல் உள்ளிட்ட மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் சார்ந்த 8க்கும் மேற்பட்ட அறிவுரைகளை வழங்கி பள்ளி கல்லூரி நிர்வாகங்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இன்றுவரை பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று 3 மாவட்டத்திலும் உத்தரவு வராத நிலையில், நீண்ட இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்வதற்காக நாளொன்றுக்கு 9 பீரியடுகளாக உள்ளதை 11 பீரியட்களாக மாற்றி ஒவ்வொரு நாளும் பள்ளிநேரத்தை கூடுதலாக ஒன்றரை மணிநேரம் நடத்துவதற்கான புதிய பாட நேர அட்டவணையை தயார் செய்யும் பணியில் தனியார் பள்ளிகள் மும்முரமாக உள்ளன.
மேலும் மொழிப்பாடப்பிரிவை தவிர்த்து கணிதம், இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளில் கூடுதல் நேரம் செலவு செய்து மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்துள்ளனர். மேலும் தனியார் பள்ளிகளுக்கு தேவையான போதிய நிதி அவர்களிடம் இருப்பதாலும் செலவு செய்து கொள்ளும் உரிமை அவர்களுக்கு உள்ளதாலும் இந்த 2 நாட்களிலேயே 90 சதவீதம் தனியார் பள்ளிகள் பாதுகாப்பாகவும், சுகாதாரமாகவும் இயங்குவதற்கு பள்ளி வளாகத்தின் உள் வசதிகளை சிறப்புற செய்துவிட்டனர்.
ஆனால் அரசு பள்ளிகளுக்கு போதுமான நிதி ஆதாரம் இல்லாமையால் 3 மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகள், அரசு அறிவுறுத்திய 8 க்கும் மேற்பட்ட அறிவுரைகளை பின்பற்றவும் பள்ளிகள் பாதுகாப்பாகவும் சுகாதாரமாகவும் இயங்குவதற்கும் போதுமான நிதியை பெற ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் உதவிகள் பெற்று செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். அரசு கல்வித்துறை இதற்காக எந்த நிதியும் இதுவரை ஒதுக்கீடு செய்யாததால் அரசு பள்ளிகள் தனியாரிடம் கைவிரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு பள்ளிகள் நாளையோ நாளை மறுநாளோ திறக்கப்பட்டால் பாதுகாப்பான குடிநீரை கூட மாணவர்களுக்கு வழங்க இயலாத நிலையில் இருப்பதாக பெற்றோர்கள் குறைகூறுகின்றனர். இதனால் அரசு பள்ளிகள் நாளை திறப்பதற்கு வாய்ப்பு குறைவு என கூறப்படுகிறது.