தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்கள் கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி
10/26/2015 3:21:51 PM
சென்னை: அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கோயம்பேட்டில் நடைபெற்றது. இதில் சென்னையில் இருந்து அனைத்து ஊர்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கான கட்டண நிர்ணயம் மற்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தனியாக தொலைபேசி எண்கள் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து இன்று காலை அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் மற்றும் ஆபரேட்டர்கள் சங்கம் பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது: அடுத்த மாதம் 10ம்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதற்கு அசோசியேஷன் சார்பில் சிறப்பு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளோம். ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்தால் 044-42823484 என்ற தொலைபேசி எண்ணுக்கு புகார் தெரிவிக்கலாம். தமிழகம் முழுவதும் 2ஆயிரம் ஆம்னி பஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் 40 சதவீத பஸ்களுக்கு சிசிடி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வதால் ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இதற்கு எவ்விதத்திலும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் பொறுப்பேற்ற முடியாது. அனைவரும் ஆம்னி பஸ்களில் தான் கட்டண கொள்ளை என புகார் தெரிவிக்கின்றனர். ஆனால் மேக்சி கேப்புக்கு(சீட்டடு வேன்) அனுமதியே 12 இருக்கைகள் மட்டும் தான். ஆனால் அவர்கள் 20 பேர் வரை ஏற்றி செல்கின்றனர். இதை இதுவரை யாரும் கண்டுகொள்வது கிடையாது. ஆம்னி பஸ்களின் கட்டணத்தை பொறுத்தவரை அரசு நிர்ணயம் செய்வதில்லை. ஆனால் அரசு நிர்ணயித்தால் அதை ஏற்கவும் தயாராகவும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏன்?ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் மேலும் கூறுகையில்,‘‘சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்லும் போது பயணிகள் அதிகம் பேர் ஏறுகின்றனர். ஆனால் மறுபடியும் திரும்ப சென்னைக்கு வரும் போது கூட்டம் அதிகமாக இருப்பது இல்லை. மேலும் சுங்க கட்டண வரியும் அதிகமாக உள்ளது. இதனால் தான் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார்.
எந்த ஊருக்கு எவ்வளவு கட்டணம்: சென்னையிருந்து திருச்சி, தஞ்சாவூர், சேலம், நாகப்பட்டினம், வேளாங்கன்னி நான் ஏசி ரூ.650, ஏசி ரூ.790, சிலிப்பர் நான் ஏசி ரூ.760, சிலிப்பர் ஏசி ரூ.1100, மல்டி ஆக்சில் ரூ.1050, சென்னையிலிருந்து காரைக்குடி, அறந்தாங்கி, ஈரோடு, பட்டுக்கோட்டை, திண்டுக்கல் நான் ஏசி ரூ.700, ஏசி ரூ.750, சிலிப்பர் நான் ஏசி ரூ.800, சிலிப்பர் ஏசி ரூ.1150, மல்டி ஆக்சில் ரூ.1100, சென்னையிலிருந்து மதுரைக்கு நான் ஏசி ரூ.750, ஏசி ரூ.800, சிலிப்பர் நான் ஏசி ரூ.850, சிலிப்பர் ஏசி ரூ.1280, மல்டி ஆக்சில் ரூ.1200, சென்னையிலிருந்து திருச்செந்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு நான் ஏசி ரூ.900, ஏசி ரூ.1100, சிலிப்பர் நான் ஏசி ரூ.1000, சிலிப்பர் ஏசி ரூ.1550, மல்டி ஆக்சில் ரூ.1450 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், மற்ற நாட்களை விட சராசரியாக 40 முதல் 50 சதவீதம் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பயணிகளுக்கு அதிர்ச்சி தந்துள்ளது.