கத்திப்பாரா மேம்பாலம் முறையாக பராமரிக்கப்படுமா? பழுதான மின்விளக்குகள், சிசிடிவி கேமராக்கள்; சேதமான சர்வீஸ் சாலைகள்
10/15/2015 2:14:11 PM
சென்னை, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் கடந்த 2008-ம் ஆண்டு, திமுக ஆட்சியின்போது கட்டப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய மேம்பாலங்களில் இதுவும் ஒன்று.கத்திப்பாரா மேம்பாலம் வருவதற்கு முன், சென்னையில் இருந்து விமான நிலையத்துக்கும், தாம்பரத்தில் இருந்து பாரிமுனை, அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு செல்லும் சாலையிலும், சென்னையில் இருந்து பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் செல்லும் பகுதியிலும் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.இதை தவிர்ப்பதற்காக, பிரபல வெளிநாட்டு கட்டிட நிபுணர்களின் வழிகாட்டுதலில் பிரமாண்ட முறையில் கத்திப்பாரா மேம்பாலம் கட்டப்பட்டது.தாம்பரத்தில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக அண்ணாசாலை செல்பவர்களும், தாம்பரத்தில் இருந்து அசோக் பில்லர், வடபழனி, கோயம்பேடு செல்பவர்கள் மேம்பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
கிண்டி பகுதியை சுற்றியுள்ளவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழுள்ள சர்வீஸ் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், ஏராளமான மக்கள் பயன்படுத்தி வரும் கத்திபாரா மேம்பாலம் கடந்த சில ஆண்டுகளாக சரிவர பராமரிக்கப்படாமல், ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. மேலும், இங்கு 200-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் பழுதடைந்து, பெரும்பாலான நேரங்களில் எரியாமல், அப்பகுதியே இருண்டு காணப்படுகிறது.இந்த மேம்பாலத்தில் விபத்துகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட சிசிடிவி கேமரா பராமரிக்கப்படாமல் பழுதடைந்து, பரிதாபமான நிலையில் தொங்கி கொண்டிருக்கிறது.கத்திபாரா மேம்பாலம் துவங்கிய புதிதில் மேம்பாலத்தில் வாகனத்தில் செல்வோர் பாதைகளை அறிவதற்காக போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். தற்போது அவர்கள் அங்கு நிறுத்தப்படாததால், திசைமாறி வருபவர்களால் அடிக்கடி வாகன விபத்துகள் நடைபெறுகின்றன.
மேலும், மேம்பாலத்தில் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வது, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டுவது போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது.சர்வீஸ் சாலையில் ரோடுகள் சரியாகப் போடப்படாததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இங்கு அமைக்கப்பட்ட 2 சுரங்கப்பாதைகளில் ஒன்று கழிவுநீர் குளமாக மாறிவிட்டது. இன்னொரு சுரங்கப்பாதையை உடைத்து, சர்வீஸ் சாலையாக மாற்றி விட்டனர்.மேம்பாலத்தின் கீழ் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, இப்பகுதிகளில் கழிவுநீர் குளம் போல் தேங்கியுள்ளது. இப்பகுதியில் சரிவர பராமரிக்கப்படாததால், தனியார்களின் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவிட்டது.
இந்த வாகன ஆக்கிரமிப்பை அருகிலேயே போக்குவரத்து அலுவலகம் இருந்தும், போலீசாரோ அதிகாரிகளோ இதுவரை கண்டுகொள்ளாமல் சென்று விடுகின்றனர். இதனால் இரவு நேரங்களில் மதுபான பாராகவும் மாறி விடுகிறது. சமூகவிரோத செயல்கள் நடைபெறும் இடமாகவும் மாறிவிட்டது.மேலும், நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, கத்திப்பாரா மேம்பாலத்திலும் மேம்பாலத்தின் கீழும் வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டன. பேனருக்காக கட்டப்பட்ட மரப்பலகைகளை கடந்த ஒரு மாதமாக சாலையிலேயே போக்குவரத்துக்கு இடையூறாக போட்டு வைத்துள்ளனர்.
ஆரம்பித்த புதிதில் அனைத்து மக்களாலும் அதிசயமாக பார்க்கப்பட்ட கத்திபடபாரா மேம்பாலம், தற்போது மோசமான நிலையில் காணப்படுகிறது. இங்குள்ள கழிவு மற்றும் மழைநீர் அடைப்பு, சாலை பராமரிப்பு பணிகளை செய்வதற்கு நெடுஞ்சாலை, மாநகராட்சி, கன்டோன்மெண்ட் நிர்வாகத் தரப்பினர் போட்டிபோட்டுக்கொண்டு, பணிகளை செய்ய மறுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.கத்திப்பாரா மேம்பாலத்தில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நிலையில், முறையான பராமரிப்பு இல்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பாலத்தில் ஏற்பட்டுள்ள விரிசலை சரி செய்யவில்லை என்றால், பாலம் விரைவில் பழுதடைந்து விடும். மின்விளக்குகள் சரிவர எரியாததால் இரவு நேரங்களில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பழுதான மின்விளக்குகளை உடனடியாக மாற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்த வேண்டும்.
மேம்பால பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்குவதால், அவ்வழியே செல்வோர் சிரமத்துக்கு ஆளாகின்றனர். மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில், இதை சரிசெய்வது அவசியம். கழிவுநீர் குழாய்கள் அடிக்கடி உடைவதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்படும். மேலும், குடிநீர் குழாய்கள் உடைப்பும் இங்கு அடிக்கடி நிகழ்வதால், குடிநீர் வீணாகிறது. இதை சரிசெய்ய சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேம்பாலத்தில் திசைமாறி செல்பவர்களால் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க போதிய போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும். மேம்பால பகுதியில் சிலர் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர். வாகனங்களின் ஆக்கிரமிப்பால் விபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது. போக்குவரத்து போலீசார் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேம்பாலப் பகுதியில் இரவு நேரத்தில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுக்க போலீசார் அடிக்கடி ரோந்து வரவேண்டும். மேம்பால பகுதியில் பேனர்கள் வைக்கவோ, விளம்பரங்கள் செய்யவோ அனுமதிக்க கூடாது. விபத்துக்களை கண்காணிக்கும் வகையில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை முறையாக பராமரிக்க வேண்டும்.இப்பாலத்தில் உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, மேம்பாலத்தின் கீழ்பகுதியில் காலியாக உள்ள இடங்களில் எழில் வண்ண பூங்காக்களை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா?