விஷால் ரெட்டி, கார்த்தியை யாரோ தூண்டி விடுகிறார்கள் : ராதிகா சரத்குமார் பகீர் புகார் : ஒருமையில் பேசிய சிம்பு
10/8/2025 3:42:45 PM
சென்னை: சரத்குமார் அணி சார்பில் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் ராதிகா சரத்குமார். அப்போது அவர் கூறியதாவது:இங்கு சரத்குமார் மனைவியாகப் பேசவில்லை. நடிகர் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் பேசுகிறேன். இப்போது நடக்க உள்ள தேர்தல் பற்றி நினைத்தால் வெட்கமாகவும், அசிங்கமாகவும் இருக்கிறது. நடிகர் சங்கம் சம்பந்தமாக, முதலில் அந்த அணியினர் கையெழுத்து வேட்டை ஆரம்பித்தார்கள். கார்த்தியிடமும், நாசரிடமும் இது பற்றி கேட்டேன். பிறகு கமல்ஹாசனிடமும் சரத்குமார் கேட்டார். ஆனால், முதல் கையெழுத்து கமல் போட்டார். நடிகர் சங்கம் பற்றி யார், என்ன கேள்வி வேண்டும் என்றாலும் கேட்கலாம். ஆனால், அந்த அணியினர் என் குடும்பத்தைப் பற்றி தவறாகப் பேசுகிறார்கள். சில வாரங்களுக்கு முன்பு விஷாலிடம் பேசினேன். நடிகர் சங்க விவகாரத்தில் ஒற்றுமையாக இருப்போம் என்று சொன்னேன். பிறகு சிவகுமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். இதையடுத்து கமலிடம் பேசினேன். இப்படி எல்லாம் பேசுவது அசிங்கமாக இருக்கிறது என்றேன்.
இது பற்றி ‘நாசரிடம் நீங்கள் பேசுங்களேன்’ என்று சொன்னேன். ‘நான் இந்த விஷயத்துக்குள் வர விரும்பவில்லை’ என்று கமல் சொன்னார். என் கணவர் சரத்குமார் பற்றி தொடர்ந்து அசிங்கமாகப் பேசுகிறார்கள். விஷால் யாரையும் பொருட்படுத்தாமல், யாரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் பேசுகிறார். விஷால் ரெட்டியையும் கார்த்தியையும் யாரோ பின்னணியில் இருந்து தூண்டி விடுகிறார்கள். சரத்குமார், ராதா ரவி இருவரும் மீண்டும் தேர்தலில் நிற்போம் என்று சொன் னார்களா? அவர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார்களே, அதற்கு ஆதாரம் இருக்கிறதா? தேர்தலில் வெற்றி, தோல்வி சகஜம். தயவு செய்து நடிகர் சங்கத்தின் ஒற்றுமையை உடைக்காதீர்கள். இவ்வாறு ராதிகா பேசினார்.
ஒருமையில் பேசிய சிம்புசிம்பு பேசும்போது விஷால் அணியினரை அவன் இவன் என்று கூறினார். அவர் கூறும்போது, ‘இன்றைக்கு யாரோ வந்து என் சினிமா குடும்பத்தை உடைக்க நினைக்கிறார்கள். நடிகர் சங்கம் பக்கம் வராதவர்கள் எல்லாம் இன்று கேள்வி கேட்கிறார்கள். கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதை இருக்கிறது? குடும்பமாக இருந்த நடிகர் சங்கத்தை விஷால் பிரித்து விட்டார். நல்லவர்கள் கையில் இந்த சங்கம் இருக்க வேண்டும். அதனால் தயவு செய்து எங்கள் பக்கம் எல்லாரும் வாருங்கள். வரும் 11ம் தேதி நடக்கும் கூட்டத்தில் எங்களது பலத்தை நிரூபிக்கிறோம். சங்க ஒற்றுமைக்காக தேர்தலில் இருந்து எங்கள் அணியினர் வாபஸ் பெறவும் தயாராக இருக்கிறோம்’ என்றார்.கே. பாக்யராஜ், பூர்ணிமா, ஊர்வசி, மோகன்ராம் உடனிருந்தனர்.