நடிகர் சங்க தேர்தலில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை: நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி
10/8/2025 3:42:20 PM
சேலம்: நடிகர் சங்கத் தேர்தலில் சமரசத்திற்கு வாய்ப்பே இல்லை. போட்டியில் இருந்து வாபஸ்பெற மாட்டோம் என்று நடி்கர் விஷால் கூறினார். தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 18ம் தேதி சென்னையில் நடக்கிறது. இதில் சரத்குமார்-ராதாரவி தலைமையிலான அணியும், விஷால்-நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும் போட்டியிடுகின்றன. ேதர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில் விஷால் அணியினர் இன்று (8ம் தேதி) சேலத்தில் நாடக நடிகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர்.தொடர்ந்து நடிகர் விஷால் நிருபர்களிடம் கூறியது:நடிகர் சங்க தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். தற்ேபாது தயாரிப்பாளர் சங்கத்தினரும், இயக்குநர்கள் சங்கத்தினரும் எங்களிடம் சமரசத்திற்கு வந்துள்ளனர். அவர்களின் முயற்சியை நான் மதிக்கிறேன். அதே நேரத்தில் தேர்தல் நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். சமரசத்திற்கு எந்த வாய்ப்பும் இல்லை. போட்டியில் இருந்து வாபஸ் பெற மாட்டோம்.
எங்கள் முடிவு இன்று எடுத்ததல்ல. 3 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த ஒரு கேள்வியால் எடுக்கப்பட்டது. விஷால், கார்த்தியால் சங்கத்தை நடத்த முடியுமா? என்கின்றனர். நானும் ஒரு தயாரிப்பாளர் தான். எங்களால் நல்ல முறையில் நிர்வாகத்தை நடத்த முடியும். எல்லா மனிதர்களையும் ஒருங்கிணைத்து நல்லது நடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான், தேர்தலில் போட்டியிடுகிறோம்.நடிகர் சங்கத்துக்கு சொந்தமான இடத்தில் சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. கண்டிப்பாக அதற்கான நடவடிக்கை எடுப்போம். தயாரிப்பாளர் சங்கம் முதல் அனைத்திற்கும் தேர்தல் நடக்கிறது.
அதே போல் நடிகர் சங்க தேர்தலும் நடக்க வேண்டும். அதே நேரத்தில் அனைத்து நடிகர்களும் தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.நான் ஒரு நடிகர், சங்கத்தில் உறுப்பினர் கார்டு வைத்துள்ளேன். அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறேன். தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. தேர்தலில் அவர் வாக்களிக்க வந்தால் அதை விட பெரிய சந்தோஷம் எதுவும் எங்களுக்கு இல்லை. முதல்வர் வாக்களித்தால் வரலாற்றில் அது மறக்க முடியாத நிகழ்வாக அமையும்.இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.