வரும் தேர்தலில் ஜெயலலிதா படுதோல்வி உறுதி: இளங்கோவன்
10/8/2025 3:41:05 PM
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிமுக ஆட்சியாளர்களோ இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ தயாராக இல்லை. இந்நிலையில் 27 ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக் குழுவான ‘ஜேக்டோ” சார்பில் இன்று முதல் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் பள்ளிகள் செயல்படாமல் முடங்குகிற நிலை ஏற்பட்டுள்ளது.கல்வித்துறை அதிகாரிகள் இக்கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை, எந்த முடிவையும் முதலமைச்சர்தான் எடுக்க வேண்டும் என்று கையை விரிக்கிற அவலமான நிலை இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் முதலமைச்சரை அமைச்சர்களே பார்க்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 37 ஆயிரம் பள்ளிகளில் 40 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இவர்களுக்கு கல்வி போதிக்க வேண்டிய 3 லட்சம் ஆசிரியர்களும் ஒட்டுமொத்தமாக பள்ளிகளை புறக்கணித்து போராடுவதை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர வேண்டிய பொறுப்பு முதல்வர் ஜெயலலிதாவுக்கு இருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் வராத நிலையில், பள்ளிகளை சத்துணவு அமைப்பாளர்களை வைத்து நடத்துவது என்கிற முடிவு மிகுந்த கண்டனத்திற்குரியது. இன்று தமிழக அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகள் கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சியில் ‘எஸ்மா” சட்டத்தை நினைவுபடுத்துகிறது.
இந்நிலை நீடிக்குமேயானால் ஒட்டுமொத்த தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கடந்த காலத்தில் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிராக கடும் போராட்டம் நடத்தியதைப் போல மீண்டும் அத்தகைய போராட்டத்தை நடத்துகிற சூழல் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சினையில் தீர்வுகாண உடனடியாக கவனம் செலுத்தவில்லையென்றால், 1996 தேர்தலில் எத்தகைய தோல்வியை ஜெயலலிதா சந்தித்தாரோ, அதற்கு சற்றும் குறையாத படுதோல்வியை 2016 தேர்தலில் சந்திப்பதிலிருந்து தப்ப முடியாது.