அயனாவரத்தில் பட்டம் விடுதல் தீமை குறித்து கருத்தரங்கு மாணவர்கள் உறுதிமொழி
10/8/2025 3:39:15 PM
கீழ்ப்பாக்கம்: சென்னை நகரில் பட்டம் பறக்க விடுவது முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டு உள்ளது. அதையும் மீறி ஒருசிலர் பட்டம் பறக்க விடுவதால், பள்ளி மாணவ-மாணவிகள், குழந்தைகள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் என பலரும் உயிரிழந்து வருகின்றனர்.சமீபத்தில்கூட, பெரம்பூர் மேம்பாலத்தில் குடும்பத்தினருடன் சென்ற 5 வயது சிறுவன் ஒருவன், மாஞ்சா நூல் கழுத்தை அறுத்ததில் பரிதாபமாக பலியானான்.அதேபோல, கடந்த சில நாட்களுக்கு முன், வடசென்னை பகுதியில் பட்டம் பறக்க விட்ட அதிமுக பிரமுகரின் மகனை கைது செய்ய போன போலீசார் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவத்தை அறிய முடிந்தது.‘தமிழக அரசின் தடை உத்தரவை மீறி யாரும் பட்டம் பறக்க விடக்கூடாது’ என்று போலீசார் பலமுறை அறிவுறுத்தினாலும், யாரும் அதைப் பற்றி காதில் போட்டுக் கொள்வது இல்லை.
இந்நிலையில், பட்டம் பறக்க விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ-மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அயனாவரம் போலீஸ் நிலைய வளாகத்தில் நேற்று மாலை கருத்தரங்கு நடைபெற்றது.இதில், அயனாவரம் கல்கி ரங்கநாதன் மான்ட்போர்டு மெட்ரிகுலேஷன் பள்ளியை சேர்ந்த 3 ஆயிரம் மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.இக்கருத்தரங்கின்போது, பட்டம் பறக்க விடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து அயனாவரம் போலீஸ் அதிகாரிகள் யுவராஜ், சங்கர் ஆகியோர் விளக்கி பேசினார்கள்.இதைத் தொடர்ந்து கருத்தரங்கில் பங்கேற்ற மாணவ-மாணவியர், ‘இனி நாங்கள் பட்டம் பறக்க விட மாட்டோம். மேலும் பட்டம் விற்பனை செய்பவர்கள், மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள், காற்றாடி விடுபவர்கள் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிப்போம்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.இக்கருத்தரங்கில் பள்ளி மாணவ-மாணவிகளுடன் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.