வளசரவாக்கத்தில் சினிமா டான்ஸ் மாஸ்டர் வீட்டில் கஞ்சா செடிகள் உறவினர் தலைமறைவு
10/8/2025 3:38:37 PM
பூந்தமல்லி: சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட வள்ளியம்மை நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிரபல சினிமா நடன இயக்குநர் லலிதா மணி (48). இவருக்கு அங்கு 2 அடுக்கு குடியிருப்பு உள்ளது.அதில், தரைதளத்தில் லலிதாமணி தங்கியிருக்கிறார். முதல் மற்றும் 2-ம் தளத்தில் குறும்பட இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், சினிமா துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டவர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் லலிதாமணி செடிகள் வளர்த்து வருகிறார். இச்செடிகளுக்கு இடையே கஞ்சா செடிகளை வளர்ப்பதாக வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் வந்தது.இதைத் தொடர்ந்து, லலிதாமணி வீட்டுக்கு நேற்றிரவு வளசரவாக்கம் போலீசார் சென்று, மொட்டை மாடியில் சோதனை போட்டனர். அங்கு ஒரு பெரிய தொட்டியில் பயிரிடப்பட்டு இருந்த 4 முதல் 5 அடி உயரமுள்ள 5 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.
சென்னை நகரின் மையப் பகுதியில், சினிமா நடன இயக்குநர் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்தது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லலிதாமணியிடம் விசாரித்தனர். ‘நான் 2 மாடிகளையும் வாடகைக்கு விட்டிருக்கிறேன். நான் மொட்டை மாடிக்கும் செல்வதில்லை. கஞ்சா செடிகளையும் வளர்க்கவில்லை’ என்று லலிதாமணி கூறினார்.இதைத் தொடர்ந்து அங்கு வாடகைக்கு குடியிருந்தவர்களிடம் போலீசார் விசாரித்தபோது, ‘நாங்கள் இங்கு வாடகைக்கு குடியிருக்கிறோம். நாங்கள் செடிகளை வளர்க்க முடியாது. லலிதாமணியின் உறவினர் அபிஷேக் (30) என்பவருக்கு கஞ்சா குடிக்கும் பழக்கம் உள்ளது. அவர்தான் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்திருக்கிறார். அவர் வீட்டு உரிமையாளரின் சொந்தக்காரர் என்பதால், அவரை நாங்கள் எதுவும் கேட்கவில்லை’ என்று கூறினர்.இந்நிலையில், லலிதாமணியின் வீட்டு மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை வளர்த்த அபிஷேக், போலீசார் தேடுவதை அறிந்து தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.