டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதலை தீவிரப்படுத்த வேண்டும் : அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
10/8/2025 3:35:39 PM
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:நடப்பாண்டிற்கான நெல் கொள்முதல் விலையை கடந்த 30ம் தேதி அரசு அறிவித்தது. ஆனால், அதன்பின் ஒருவாரம் ஆகியும் காவிரி பாசன மாவட்டங்களில் போதிய எண்ணிக்கையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படவில்லை. சில இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றில் நேரடி நெல் கொள்முதல் இன்னும் முறைப்படி தொடங்கவில்லை. குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் தங்களின் விளைபொருளை விற்பதற்காக நெல் கொள்முதல் நிலையங்களுக்கு சென்றால் பல்வேறு காரணங்களைக் கூறி திருப்பி அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு வழங்குவதற்கான பணம் இல்லை என்று காரணங்கள் கூறப்படுவதாக உழவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். நெல் கொள்முதல் செய்யப்படுவதில் காட்டப்படும் அலட்சியம் காரணமாக கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த திங்கள்கிழமை பெய்த மழையில் நனைந்து முளைவிடத் தொடங்கிவிட்டன. முளை விட்ட நெல்லை விற்பனை செய்ய முடியாது என்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில், குறுவை நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறி அவற்றை கொள்முதல் செய்ய அதிகாரிகள் மறுப்பதாகக் கூறப்படுகிறது. 18 விழுக்காட்டிற்கும் குறைவான ஈரப்பதம் உள்ள நெல்லை மட்டுமே கொள்முதல் செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறிவிட்டதால் பெரும்பாலான விவசாயிகள் தங்களின் நெல்லை விற்பனை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். இன்னும் பல விவசாயிகள் வேறு வழியின்றி அடிமாட்டு விலைக்கு தனியாரிடம் நெல் மூட்டைகளை விற்கும் கொடுமையும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்த தமிழக அரசு, அவற்றில் நெல் கொள்முதலை தாமதப்படுத்துவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல.காவிரி பாசன மாவட்ட விவசாயிகளின் நிலைமையை புரிந்து கொண்டு நெல் கொள்முதலை தீவிரப் படுத்துவதுடன், 21 சதவீதம் வரை ஈரப்பதமுள்ளநெல்லையும் கொள்முதல் செய்ய ஆணையிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.