வாள்வீச்சு வீராங்கனைக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி ஜெயலலிதா அறிவிப்பு
10/8/2025 3:33:21 PM
சென்னை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, 2014ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளதோடு, இந்த ஆண்டு மங்கோலியாவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார். இது மட்டுமின்றி காமன்வெல்த் ஜூனியர் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களையும் வென்றுள்ளார். தற்போது பவானி தேவி, 2016ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், பவானி தேவி இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொள்ள நிதியுதவி வழங்கிட வேண்டுமென்று எனக்கு கோரிக்கை மனுவினை அளித்திருந்தார். அவரது கோரிக்கையை உடனடியாக ஏற்று இம்மாதம் வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் பவானி தேவி கலந்து கொள்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் உடனடியாக 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், பவானி தேவி, வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெறவிருக்கும் வாள்வீச்சுப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களைவெல்ல எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.