துரைப்பாக்கம் அருகே பரபரப்பு : செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் தீக்குளித்து சாவு : நடவடிக்கை எடுக்க பெற்றோர் வலியுறுத்தல்
10/8/2025 3:23:57 PM
துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் அருகே ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் மாணவர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மகன் மதுக்குமார் (27). இவர், செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியார் குழுமத்துக்கு சொந்தமான செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் 2013ம் ஆண்டு எம்.சி.ஏ. படித்து முடித்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) பெறுவதற்காக அடிக்கடி கல்லூரிக்கு வந்து சென்றார் மதுக்குமார். ஆனாலும் டி.சி. வழங்கப்படவில்லை. நேற்று முன்தினமும் வழக்கம்போல் கல்லூரிக்கு வந்த மதுக்குமாருக்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் இடையே பெரும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர், நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். தீமளமளவென உடல் முழுவதும் பரவியது. அலறி துடித்தார். அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர்.
செம்மஞ்சேரி போலீசார், மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது, உயிருக்கு போராடிய மதுக்குமார், மரண வாக்குமூலம் அளித்தார். அதில், ‘நான் கடந்த 2013ம் ஆண்டு செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ. படித்து முடித்தேன். ஆனால் எனக்கு தர வேண்டிய மாற்றுச்சான்றிதழை (டி.சி.) கல்லூரி நிர்வாகம் தரவில்லை. பலமுறை கல்லூரிக்கு சென்று கேட்டபோது என்னை, அலைகழித்தனர். அதோடு அடிக்காத குறையாக என்னை, கல்லூரியை விட்டு வெளியேற்றினர். இதனால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வந்தேன். பல முறை கேட்டும் கல்லூரி நிர்வாகம் கொடுக்க மறுத்ததால் மன உளைச்சலில் கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தேன்’ என்று வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். அதன்பின் அவர், கோமா நிலைக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை, மதுக்குமார் பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவரின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். மாணவரின் தீக்குளிப்பு சம்பவம் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே இந்த குழுமத்துக்கு சொந்தமான ஒரு கல்லூரி விடுதியில் மாணவன் ஒருவன், முகத்தை பிளாஸ்டிக் கவரால் இறுக்கி மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதில், மாணவன் தற்கொலை செய்து கொண்டான் என கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி போலீசாரும் வழக்கு பதிவு செய்து வழக்கை முடித்து விட்டனர். இந்த சம்பவத்தில் போராட்டம் நடத்த முயன்ற மாணவர்களை கல்லூரி நிர்வாகம் எச்சரித்தது. அதனால் அவர்களும், தங்களது எதிர்கால நலன் கருதி, வகுப்பறைக்கு சென்று விட்டனர்.
கல்லூரியில் இதுபோன்ற சம்பவம் நடந்தால் செம்மஞ்சேரி போலீசாரோ அல்லது உயரதிகாரிகளோ தகுந்த நடவடிக்கை எடுப்பதில்லை. பெயரளவுக்கு கல்லூரிக்கு சென்று, விசாரணை நடத்துகின்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகம் கூறும் தகவலை மட்டும் பெற்று கொண்டு, அவர்களுக்கு சாதமாக செயல்படுகின்றனர். இதனால் கல்லூரியில் நடைபெறும் உண்மையான சம்பவங்கள் வெளிேய தெரியாதவாறு மறைக்கப்படுகிறது. இதுபோன்ற சம்பவங்களில் நுண்ணரிவு பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் சரியாக விசாரிக்காமல் அந்தந்த காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தெரிவிக்கும் ஒருதலைபட்சமான தகவல்களை மட்டும் உயரதிகாரிகளுக்கு தெரிவித்து விட்டு இருந்து விடுகின்றனர். இதனால் உண்மை சம்பவங்கள் மறைக்கப்படுகிறது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நேர்மையான நுண்ணரிவு பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசாரை நியமிக்க வேண்டும். அவர்கள் தீர விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.